
"விமான நிறுவனங்களின் வருவாய் சரிவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே பொறுப்பாகும்; விமான நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளில் அரசால் தலையிட முடியாது' என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறினார்.
உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை சரிவைச் சந்தித்து வருகிறது. அரசின் நிறுவனமான ஏர்-இந்தியா தொடர்ந்து பல ஆண்டுகளாக கடன் சுமையில் தவித்து வருகிறது.
இதேபோல், நிதி பற்றாக்குறையால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பல விமானங்களை இயக்க முடியால் நிறுத்திவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானிகளுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஜெட் ஏர்வேஸýக்கு கடன் வழங்கிய வங்கிகள் விமானங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கு அந்த நிறுவனத்தின் வாரியக் குழு, மார்ச் 25-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில், விமானச் சேவை குறித்து அமைச்சர் சுரேஷ் பிரபு, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
விமான நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, விமானிகள் பற்றாக்குறையால் பல விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருப்பது போன்ற காரணங்களால் உள்நாட்டு விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும், நிதிச் சுமையில் இருந்து அந்த நிறுவனங்கள் மீண்டு வருவதற்காக, அரசு அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, விமான எரிபொருள் மீதான உற்பத்தி வரி 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நிறுவனமும், தங்களது நிதியாதாரம், சந்தை மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தொழிலைத் திட்டமிடுகின்றன. அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே அந்த விமான நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கிறது.
ஒரு விமான நிறுவனத்தின் வருவாய் அதிகரிப்பதற்கும், சரிவடைவதற்கும் அந்த விமான நிறுவனமும், அதன் பங்குதாரர்களுமே பொறுப்பாவர். எனினும், விமானப் போக்குவரத்து துறையின் நிலையை அறிந்து, அந்த துறையின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு தொடர்ந்து அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச தேவைக்கு ஏற்பவும், உள்நாட்டு தேவைக்கு ஏற்பவும், விமானப் போக்குவரத்து துறையில் தொடர்ந்து சில மாற்றங்களை செய்து கொண்டே இருக்க வேண்டியுள்ளது. எனினும், விமான நிறுவனங்களின் அன்றாடச் செயல்பாடுகளில் அரசால் தலையிட முடியாது என்றார் அவர்.