
மக்களவைத் தேர்தலையொட்டி, தெலங்கானாவில் பிரதமர் நரேந்திர மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் திங்கள்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
தெலங்கானாவில் மக்களவைத் தேர்தல், ஏப்ரல் 11-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாள்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாகப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாதில் உள்ள எல்.பி. ஸ்டேடியத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பேசவுள்ளார்.
இதேபோல், தெலங்கானாவில் திங்கள்கிழமை சூறாவளி பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி, அங்குள்ள ஜகீராபாத், வனபர்த்தி, ஹுஜுர்நகர் ஆகிய நகரங்களில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்.
இனிவரும் நாள்களில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள், பாஜக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் கூறினார்.
தெலங்கானாவில் கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 119 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 17 தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. பிரதமர் மோடியின் செல்வாக்கு காரணமாக, இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் பாஜக உள்ளது.
இதேபோல், சட்டப் பேரவைத் தேர்தலில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாதம் புதிய பிரச்னை உருவெடுத்தது. அதாவது, அக்கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், காங்கிரஸிலிருந்து விலகி ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தனர். இதையடுத்து, கட்சியின் செல்வாக்கை உயர்த்துவதற்காக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.டி.ராமாராவ் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரசார பொதுக் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.