வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து சோலார் மோசடி புகழ் சரிதா நாயர் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சூரிய மின்தகடு வழக்கு புகழும் தொழிலதிபருமான சரிதா
வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்து சோலார் மோசடி புகழ் சரிதா நாயர் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து சூரிய மின்தகடு வழக்கு புகழும் தொழிலதிபருமான சரிதா நாயர் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். 

உத்திரப்பிரதேச மாநிலம் அமேதியில் போட்டியிடும் காங்கிரல் தலைவர் ராகுல் காந்தி, திடீரென கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். தென்னிந்திய மக்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருக்கிறது என்பதை உணர்த்துவதற்காகவும், தென்னிந்திய மக்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணா்த்தவே வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக ராகுல் விளக்கம் அளித்திருந்தார். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் வயநாடு தொகுதி அகில இந்திய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ராகுலை எதிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாரத தர்ம ஜன சேனா அமைப்பின் தலைவர் துஷார் வெள்ளாப்பள்ளியும், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.பி.சுனீரும் போட்டியிட உள்ளனர். 

இந்நிலையில், சோலார் மோசடி புகழும், தொழிலதிபருமான சரிதா நாயர் தானும் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே, எர்ணாகுளம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்த சரிதா நாயர், கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் போது சோலார் பேனல் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் கைதான சரிதா நாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம்சாட்டினார். 

கடந்த 2012-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான உம்மன் சாண்டி அரசு பங்களாவில் வைத்தும், எம்.பி. வேணுகோபால் மாநில அமைச்சரான ஏ.பி. அனில் குமார் இல்லத்தில் வைத்தும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் சூரிய மின்தகடு அமைப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகக் கூறி பல்வேறு தரப்பினரிடம் கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பில் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அதுதொடர்பாக விசாரிக்க அப்போதைய ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு ஜி. சிவரஞ்சன் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது.

அந்த ஆணையம் கடந்த ஆண்டு நவம்பரில் பேரவையில் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில், சரிதா நாயரின் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ய முதல்வர் உம்மன் சாண்டியும், அவரது 4 தனி பணியாளர்களும் உதவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், உம்மன் சாண்டி மற்றும் அவரது அமைச்சர்கள் சிலர் உள்பட, காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவர்கள் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் ஊழல் புகார் கூறி காவல் ஆணையருக்கு சரிதா நாயர் எழுதிய சர்ச்சைக்குரிய கடிதத்தின் தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, சரிதா நாயர் தெரிவித்த பாலியல் புகார் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் ஹிபி ஈடன் உள்பட பலர் சேர்க்கப்பட்டனர். ஹிபி ஈடன் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போதே அவர், எர்ணாகுளம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு சரிதா நாயர் எதிர்ப்பு தெரிவித்தார்.

பாலியல் புகாரில் சிக்கிய ஹிபி ஈடனை வேட்பாளராக அறிவித்துள்ளதை ஏற்க முடியாது என்று கூறிவந்த சரிதா நாயர், எர்ணாகுளம் தொகுதியில் ஹிபி ஈடனை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்துள்ள சரிதா நாயர், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து  போட்டியிடுவதாகவும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராகுலை எதிர்த்து போட்டியிடவில்லை. ராகுலை எதிர்த்து போட்டியிடுவதால் நல்ல விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் கேரள காங்கிரஸ் தலைவர்களின் மோசடி, ஊழல், பாலியல் லீலைகளை அம்பலப்படுத்த நல்ல வாய்ப்பு என்பதால் போட்டியிடுவதாக சரிதா நாயர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

இந்நிலையில், கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, இன்று வியாழக்கிழமை (ஏப். 4) காலை 11 மணியளவில் தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். வேட்பு மனுவை ராகுல் காந்தி தாக்கல் செய்வதற்கு முன்பு, அவர் சாலை மார்க்கமாக பேரணியாக செல்லவுள்ளார். அதில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும், உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி கட்சி பொதுச் செயலாளருமான பிரியங்காவும் உடன் வரவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com