ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்?: பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்?: பிரதமர் நரேந்திர மோடி கேள்வி


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்ட இடைத்தரகர்கள் இருவர், காங்கிரஸ் மூத்த தலைவர் பெயரையும், ஒரு குடும்பத்தின் பெயரையும் விசாரணையில் தெரிவித்துள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு: இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்க ரூ.3,600 கோடி மதிப்பில் இந்தியா கடந்த 2010-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. 
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன.  
இதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. 
இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் வெள்ளிக்கிழமை தேர்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற மோடி இது தொடர்பாக பேசியதாவது:
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேட்டில் தொடர்புடைய இடைத்தரகர்களை துபையில் இருந்து மத்திய அரசு நாடுகடத்தி கொண்டு வந்துள்ளது. 
இதில் இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டியன் மிஷெல் மற்றுமொரு இடைத்தரகரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில விவரங்கள் தெரியவந்துள்ளன. இது தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
அதில், இந்த முறைகேட்டில் லஞ்சம் பெற்றதாக அகமது படேல் (காங்கிரஸ் மூத்த தலைவர்) மற்றும் ஒரு குடும்பத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அகமது படேல் யார்? அவர் எந்த குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 
இப்போது, இதில் ஆதாயம் அடைந்த அந்த குடும்பம் எது என்பது தெரியவர வேண்டும் என்றார் மோடி.
காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யான அகமது படேல், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக பல ஆண்டுகளாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்காக மலிவான அரசியல்  


ஹெலிகாப்டர் பேர முறைகேடு தொடர்பான பிரதமரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா , அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறுவது பொய்யான தகவல். தேர்தலுக்காக மலிவான அரசியல் நடத்தப்படுகிறது. மக்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுவிட்ட பிரதமர் மோடி, ஆட்சி பறிபோகும் அச்சத்தில் உள்ளார். எனவே, அமலாக்கத்துறையை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த முயல்கிறார். பாஜக ஆட்சி முடிவுக்கு வரும் நாள் ஏற்கெனவே குறிக்கப்பட்டுவிட்டது என்றார்.

ராகுல் பதிலளிக்க வேண்டும்  
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமைதி காப்பது ஏன்? என்று மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி கேள்வி எழுப்பினார்.


தில்லியில்  வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: 
இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெலிடம் கைப்பற்றப்பட்ட டைரி குறிப்பில் ஆர்.ஜி., ஏ.பி., எஃப்ஏஎம் ஆகியோருக்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் ஆர்.ஜி. என்பது ராகுல் காந்தி, ஏ.பி. என்பது அகமது படேல், எஃப்ஏஎம் என்பது ஃபேமிலி எனப் பொருள்படும் வகையில் குடும்பத்தையும் குறிக்கும். 
நாட்டில் நடைபெறும் அனைத்து விவகாரங்கள் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்துவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் விவகாரத்தில் மட்டும் அமைதி காத்து வருகிறார். இது போன்ற முக்கிய குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்காவிட்டால், அவரிடம் சரியான பதில் இல்லை என்றே நாட்டு மக்கள் கருதுவர் என்றார் அருண் ஜேட்லி.

யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை 
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், அமலாக்கத் துறை விசாரணையின்போது, யாருடைய பெயரையும் தாம் குறிப்பிடவில்லையென தில்லி நீதிமன்றத்தில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல்  வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவரது தரப்பில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தவும், மக்களை தவறாக வழிநடத்தவும் அமலாக்கத் துறை முயல்கிறது. அமலாக்கத் துறையின் துணை குற்றப் பத்திரிகை  நீதிமன்றம் பரிசீலிக்கும் முன்னரே ஊடகங்களில் கசிந்துள்ளது. இந்த விவகாரத்தில், நீதிமன்ற விசாரணையைவிட ஊடகங்கள் நடத்தும் விசாரணையையே அமலாக்கத் துறை விரும்புகிறது. இந்த வழக்கில் நியாயமான விசாரணையை உறுதி செய்யும் வகையில் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். தீய நோக்கத்துக்காக, அமலாக்கத் துறையை ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com