தொடர் வருமான வரி சோதனைகள்: தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரி சந்திப்பு 

விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெறவுள்ள தருணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொடர் வருமான வரி சோதனைகள் தொடர்பாக...
தொடர் வருமான வரி சோதனைகள்: தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரி சந்திப்பு 

புது தில்லி: விரைவில் மக்களைவைத் தேர்தல் நடைபெறவுள்ள தருணத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் தொடர் வருமான வரி சோதனைகள் தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் செவ்வாயன்று சந்தித்து விளக்கமளித்தனர்.

வருவாய்த் துறையின் நிர்வாகப் பிரிவாக இயங்கும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மற்றும் வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் ஆகியவை நிதி தொடர்பான குற்ற நடவடிக்கைகளில் விசாரணை மேற்கொள்கின்றன.

நாடெங்கும் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலின் முதல் கட்டம் விரைவில் துவங்கவுள்ள நிலையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சில நாட்களுக்கு முன்பும், மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் உறவினர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சனிக்கிழமையன்றும் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் மத்திய வருவாய் செயலாளருக்கு திங்களன்று தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தேர்தல் நேரத்தில் வருமான வரித்துறை உள்ளிட்ட சட்ட அமலாக்க அமைப்புகள் பாரபட்சமின்றி நடுநிலையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக கருப்புப் பணம் பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழும் பட்சத்திலும், சோதனைகள் திட்டமிடப்படும் போதும் அதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்துடன் வருவாய்த்துறை செயலர் மற்றும் மத்திய நேரடி வரிகள் விதிப்பு ஆணையத் தலைவர் இருவரும் செவ்வாயன்று நேரடியாக  சந்தித்து விளக்கமளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com