Enable Javscript for better performance
காஷ்மீர்: கிஸ்த்துவாரில் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் நாளாக நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீர்: கிஸ்த்துவாரில் ஊரடங்கு உத்தரவு இரண்டாம் நாளாக நீட்டிப்பு

    By DIN  |   Published on : 11th April 2019 01:29 AM  |   அ+அ அ-   |    |  


    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்துவார் நகரில் உள்ளூர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் சந்திரகாந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ராஜீந்தர் சிங் ஆகியோர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, அங்கு இரண்டாம் நாளாக புதன்கிழமையும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 
    இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்ட போலீஸார் பயங்கரவாதிகளை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 
    கிஸ்த்துவார் நகரில் உள்ள சுகாதார நிலையத்துக்குள் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரகாந்த் சர்மாவை, பின்தொடர்ந்து வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரி ராஜீந்தர் சிங் அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி சந்திரகாந்த் சர்மா உயிரிழந்தார். 
    இருவர் பலியான சம்பவத்தால் கிஸ்த்துவார் மற்றும் பாதர்வா மாவட்டத்திலும் கடும் பதற்றம் நிலவியதால், இரு மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
    இந்நிலையில், சுட்டுக்கொல்லப்பட்ட சந்திரகாந்த் சர்மாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் கிஸ்த்துவார் நகர்ப்பகுதியில் கடும் பாதுகாப்புகளுக்கு இடையே புதன்கிழமைகிழமை மாலை நடைபெற்றது. 
    இதனிடையே, கிஸ்த்துவாரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாகவும்,  ராணுவத்தினர் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கிஸ்த்துவார் காவல்துறை துணை ஆணையர் ஏ.எஸ்.ராணா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 
    மேலும் அவர் கூறுகையில், இச்சம்பவத்துக்கு பிறகு நகர்ப்பகுதிகளில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும், சோதனைகளும் நடைபெற்று வருவதால் இதுவரை எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன், பதற்றமான பகுதிகளிலும் ஏராளமான போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்று அவர் தெரிவித்தார். 
    இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில், மாநில பாஜக தலைவர் ரவீந்தர் ராணா, முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகளை, போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
    ஆர்எஸ்எஸ் தலைவரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை
    சந்திரகாந்த் சர்மாவின் இறுதி ஊர்வலத்தின்போது வன்முறை ஏற்பட்டது. இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மதவாத மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக அப்பகுதியில் ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினர். ஊர்வலத்தில், ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். டாக் பங்களா பகுதியில் இறுதி ஊர்வலம் செல்லும்போது அதில் பங்கேற்றவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் ஆவேசத்துடன் கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஒரு கும்பல் போலீஸாரை நோக்கி கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது. அவர்கள் மீது, போலீஸார் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 
    இறுதிச்சடங்குகள், செளகான் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிச்சடங்கை தொடர்ந்து வன்முறை கும்பல் ஒன்று மாவட்ட காவல்துறை அலுவலகம் மீது கல்வீசியும், உள்ளே புகுந்து மரச்சாமான்களை சூறையாடியும் வன்முறையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp