காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார்: ஆம்ஆத்மி திடீர் பல்டி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஆம்ஆத்மி மூத்த தலைவர், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தார். 
காங்கிரஸுடன் கூட்டணிக்கு தயார்: ஆம்ஆத்மி திடீர் பல்டி

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஆம்ஆத்மி மூத்த தலைவர், தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தில்லி, ஹரியாணா, சண்டிகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 18 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க தயாராக இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியின் ஊழல் காரணமாக பிறந்ததுதான் ஆம்ஆத்மி கட்சி. ஆனால், இன்று காட்சி வேறு. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் மிகவும் ஆபத்தானவர்கள். 

இந்த நாட்டின் அனைத்து அமைப்புகளையும்  சீரழித்துவிட்டனர். எனவே பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அந்த கூட்டணியில் இணைய நாங்களும் தயாராக உள்ளோம். 

எனவே காங்கிரஸ் கட்சியும், ஆம்ஆத்மியும் கூட்டணி அமைத்தால் தில்லி, பஞ்சாப், கோவா, சண்டிகர், ஹரியாணா ஆகிய பகுதிகளில் மொத்தமுள்ள 33 இடங்களிலும் பாஜகவின் தோல்வி உறுதிசெய்யப்படும். தில்லி மட்டுமல்லாது இந்த இதர பகுதிகளிலும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வேண்டியது மிக அவசியமாகும். 

எனவே பாஜக ஆட்சியை உண்மையிலேயே காங்கிரஸ் வீழ்த்த நினைத்தால், ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது. ஆம்ஆத்மி கட்சி தனித்து நின்று வெற்றி பெறும் வல்லமை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் கட்சிக்கு ஆம்ஆத்மி ஆதரவு அளிக்கும் என்றெல்லாம் அக்கட்சித் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com