அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு குற்றப்பத்திரிகை முன்கூட்டியே வெளியானதில் தவறில்லை: நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை விளக்கம்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, அதன் விவரங்கள் ஊடகங்களில் வெளியானதில் எந்தத் தவறும் இல்லை


அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர வழக்கில், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, அதன் விவரங்கள் ஊடகங்களில் வெளியானதில் எந்தத் தவறும் இல்லை என்று தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கமளித்துள்ளது.
இதுகுறித்து அந்த நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
குற்றப்பத்திரிகை என்பது பொது ஆவணம் என்பதால், அதிலுள்ள விவரங்களை எவரும் பெறுவது குற்றம் ஆகாது.
அந்த ஆவணத்தின் நகலைப் பெறும் உரிமை யாருக்கும் கிடையாது என்று சொல்லவிட முடியாது.
எனவே, ஊடகங்களில் குற்றப்பத்திரிகை விவரங்கள் வெளியானது தொடர்பாக கிறிஸ்டியன் மிஷெல் தாக்கல் செய்துள்ள மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும் என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் கடந்த 2010-ஆம் ஆண்டு மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு ரூ.423 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி இந்த ஒப்பந்தத்தை அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்தது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. ஹெலிகாப்டர் கொள்முதல் ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக, இடைத் தரகர்களுக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் பணம் கொடுத்ததில் அரசுக்கு 39.8 கோடி யூரோ (சுமார் ரூ.2,666 கோடி) இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ சமர்ப்பித்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், ஹெலிகாப்டர் ஒப்பந்த பேரத்தில் இடைத் தரகராக செயல்பட்டதாகக் கூறப்படும் கிறிஸ்டியன் மிஷெல், துபையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு நாடு கடத்தி வரப்பட்டார். அமலாக்கத் துறை விசாரணைக்குப் பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், வழக்கு தொடர்பான துணைக் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அண்மையில் தாக்கல் செய்தது. எனினும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அந்தக் குற்றப்பத்திரிகையின் நகல்கள் ஊடகங்களுக்குக் கிடைத்து, அதன் விவரங்கள் வெளியிடப்பட்டன.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கிறிஸ்டியன் மிஷெல் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கை அரசியலாக்க வேண்டும் என்பதற்காக,  முன்கூட்டியே குற்றப்பத்திரிகையை ஊடகங்களில் அமலாக்கத் துறை கசியவிட்டுள்ளது. அந்த ஆவணங்கள் ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று மிஷெல் கோரியிருந்தார். இதையடுத்து, அந்த மனு மீது பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையிலேயே, இந்த விளக்க அறிக்கையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com