ஆதார் அவசர சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஆதார் அவசர சட்டத்துக்கு எதிரான மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆதார் அவசர சட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு


ஆதார் அவசர சட்டத்துக்கு எதிரான மனு மீது பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
ஆதார் தொடர்பான வழக்கில் கடந்த செப்டம்பரில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அரசமைப்புச் சட்டப்படி அத்திட்டம் செல்லும் என்று உறுதி செய்தது. அதேசமயம், வங்கி கணக்கு தொடங்குவதற்கும், சிம் கார்டு பெறுவதற்கும் ஆதார் கட்டாயமல்ல என்று தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும், புதிய சிம் கார்டு வாங்குவதற்கும் விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை பயன்படுத்த அனுமதிப்பது உள்பட பல்வேறு திருத்தங்களுடன் கூடிய மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியபோதும் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதைத்தொடர்ந்து, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதற்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த மார்ச் 3-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இதனிடையே, இந்த அவசரச் சட்டத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆதார் கட்டமைப்பை, தனியார் நிறுவனங்கள் பின்வாசல் வழியாக பயன்படுத்த அனுமதிக்கும் வகையில் அவசரச் சட்டம் உள்ளது. மிக அவசியமான நிலை இல்லாதபோதும், இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த 5-ஆம் தேதி பரிசீலித்த உச்சநீதிமன்றம், முதலில் உயர்நீதிமன்றத்தை அணுகும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்தியது. 
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், ஏ.ஜே.பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, ஆதார் அவசரச் சட்டத்தை எதிர்க்கும் மனு மீது நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணையை, ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், அதற்கு முன் மத்திய சட்ட அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com