இந்தியாவின் ஏ-சாட் சோதனைக்கு அமெரிக்கா ஆதரவு

விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை (ஏ-சாட்) சோதனையை மேற்கொண்ட இந்தியாவை ஆதரிக்கும் வகையில்


விண்வெளியில் வலம் வரும் செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை (ஏ-சாட்) சோதனையை மேற்கொண்ட இந்தியாவை ஆதரிக்கும் வகையில் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
விண்வெளியில் இந்தியாவுக்கு இருக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இத்தகைய சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
புவியின் உள்வட்டச் சுற்றுப்பாதையில் வலம் வந்து கொண்டிருந்த இந்திய செயற்கைக்கோளை, ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை டிஆர்டிஓ கடந்த மாதம் 27-ஆம் தேதி வெற்றிகரமாக நிகழ்த்தியது.
அந்த சாதனையின் மூலமாக, அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, விண்வெளியில் தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்ட உலகின் 4-ஆவது நாடாக இந்தியா உருவெடுத்தது.
இதுதொடர்பாக, அமெரிக்க ஆயுதப் படைகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவினருடன், அந்நாட்டு பாதுகாப்புத்துறை உத்திசார் நடவடிக்கைகளின் தளபதி ஜான் ஏ ஹெய்டன் வியாழக்கிழமை விவாதித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் ஏ-சாட் சோதனை குறித்து முதலில் எழும் அடிப்படையான கேள்வி, அதை அவர்கள் ஏன் மேற்கொண்டிருப்பார்கள் என்பதுதான். அனைத்துக் குழுவினரும் இதுகுறித்து ஆய்வு செய்ததில், விண்வெளியில் இந்தியாவுக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை சமாளிக்கவே இதை அவர்கள் செய்திருக்கலாம் என்பதே பதிலாக இருக்கிறது. அத்தகைய அச்சுறுத்தல்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இந்தியாவுக்கு இருந்திருக்க வேண்டும்.
அதே சமயம் இந்த விவகாரத்தில் விதிமுறைகள் குறித்த கேள்வி எங்கு எழ வேண்டும் என்றால், என்னுடைய கருத்துப்படி, ஏ-சாட் ஏவுகணை தாக்குதலால் விண்வெளியில் உருவாகியிருக்கும் குப்பைகள் குறித்து இருக்க வேண்டும். விண்வெளியை பாதுகாக்க வேண்டிய தளபதி என்ற அடிப்படையில் அங்கு குப்பைகள் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை என்றார் அவர்.
முன்னதாக, அமெரிக்க எம்.பி. டிம் கைன் இதுகுறித்த விவாதத்தை தொடங்கி வைத்தார். அப்போது, புவியின் உள்வட்டப் பாதையில் இந்தியா எதையோ செய்திருக்கிறது. செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணையை பயன்படுத்தி ஒரு செயற்கைக்கோளை அவர்கள் வீழ்த்தியிருக்கிறார்கள். இதனால் 400 துண்டுகளாக குப்பைகள் படர்ந்துள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. 
அதில் 24 துண்டுகள், அளவில் பெரியதாக இருப்பதால் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com