தந்தேவாடா தாக்குதல்: மாவோயிஸ்ட் இயக்கம் பொறுப்பேற்பு

சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.


சத்தீஸ்கர் மாநிலத்தின் தந்தேவாடா மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு தடை செய்யப்பட்டுள்ள மாவோயிஸ்ட் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
அந்த தாக்குதலில் பாஜக எம்எல்ஏ பீமா பீமா மந்தாவியும், அவருக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 4 பேரும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று மாவோயிஸ்ட் இயக்கம் வெளியிட்டதாகக் கூறப்படும் அறிக்கை, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த சாய்நாத் என்பவர் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பாஜக எம்எல்ஏ பீமா மந்தாவியும், அவருடைய 4 பாதுகாவலர்களும் உயிரிழக்கக் காரணமான தாக்குதலை நிகழ்த்தியது எங்கள் மக்கள் விடுதலை கொரில்லா படை (பிஎல்ஜிஏ) அமைப்புதான். தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து 4 ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளோம்.
பஸ்தர் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை மத்திய அரசு கொள்ளையடித்து, அவற்றை பெரு நிறுவனங்களுக்கு மிகவும் குறைவான விலைக்கு விற்பனை செய்து வருகிறது. மேலும், இந்தப் பகுதியில் உள்ளூர் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி, சாலை அமைத்தல், செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தல் ஆகிய பணிகளை அரசும், காவல் துறையும் மேற்கொண்டு வருகின்றன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த அறிக்கையின் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருவதாக, மாநில நக்ஸல் எதிர்ப்பு பிரிவு டிஐஜி சுந்தர்ராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நக்ஸல்களுக்கு மக்கள் ஆதரவு குறைந்து விட்டதால், அவர்களின் அமைப்பு பலவீனமடைந்து விட்டது. அவர்களுக்கு பாதுகாப்புப் படையினர் தக்க பாடம் புகட்டுவர். நக்ஸல் தாக்குதலையும் பொருள்படுத்தாமல், பஸ்தர் மக்களவைத் தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் அதிக அளவிலான மக்கள் வாக்களித்தனர் என்றார் அவர்.
கடந்த 2013-ஆம் ஆண்டு, மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக இதேபோன்ற தாக்குதலை நக்ஸல்கள் நடத்தினர். அதில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மஹேந்திர கர்மா, வி.சி.சுக்லா உள்பட 27 பேர் பலியாகினர் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com