நன்கொடை பத்திரங்கள்: கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் பெற்ற விவரங்களையும், நன்கொடை அளித்தோரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் தேர்தல்
நன்கொடை பத்திரங்கள்: கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு


தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் பெற்ற விவரங்களையும், நன்கொடை அளித்தோரின் வங்கிக் கணக்கு தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பான வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை மட்டுமே பிறப்பித்துள்ளது.
அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாகவோ அல்லது காசோலையாகவோ நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம் மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அதன்படி, ரூ.1,000, ரூ.10,000, ரூ.1,00,000, ரூ.10 லட்சம், ரூ. 1 கோடி மதிப்பிலான தேர்தல் நிதி பத்திரங்கள், ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங்களின் முதல் 10 நாள்கள் மட்டும் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) குறிப்பிட்ட கிளைகளில் விற்பனை செய்யப்படும். 
வெளிப்படைத்தன்மை இல்லை: மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கட்சிகளாக இருந்து, கடைசியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலோ அல்லது சட்டப் பேரவைத் தேர்தலிலோ 1 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற முடியும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க விரும்புவோர், உரிய தேர்தல் நிதி பத்திரங்களை வாங்கி, அதைக் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தி விட வேண்டும். இதன்மூலம், தங்களுக்கு நன்கொடை அளித்தவர்களின் விவரங்கள் அரசியல் கட்சிகளுக்குத் தெரியவராது.  
இந்நிலையில், இத்திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி அரசு சாரா நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், தேர்தல் நிதி பத்திரத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் அல்லது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவோரின் விவரங்களைப் பொதுவில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
விரிவான ஆய்வு: இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு தொடர்பான இடைக்கால உத்தரவை நீதிபதிகள் அமர்வு வெள்ளிக்கிழமை வழங்கியது. அப்போது அவர்கள் கூறியதாவது:
தேர்தல் நிதி பத்திரங்கள் தொடர்பாகத் தேர்தலுக்குப் பிறகு ஆராய்ந்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது. நன்கொடை பெற்ற விவரங்களையும், நன்கொடை அளித்தோரின் வங்கிக் கணக்கு குறித்தான தகவல்களையும் மூடி முத்திரையிட்ட உறையில் வைத்துத் தேர்தல் ஆணையத்திடம் மே 30-ஆம் தேதிக்குள் அனைத்து அரசியல் கட்சிகளும் தாக்கல் செய்ய வேண்டும். 
தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வருமான வரிச் சட்டம், தேர்தல் சட்டங்கள், வங்கிச் சட்டங்கள் உள்ளிட்டவற்றில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தங்களையும், தேர்தல் நிதி பத்திரச் சட்டம், ஆளும் கட்சிக்குச் சாதகமாக உள்ளதா என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் விரிவாக ஆராய உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். தேர்தல் நிதி பத்திரங்களைத் தடை செய்வது தொடர்பாக நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கவே..: முன்னதாக நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, அரசியலில் கருப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்கவே, இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரிவித்தார். ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போரின் விவரங்களைப் பொதுவில் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண், இத்திட்டத்தால் ஆளும் கட்சியே அதிக அளவில் பயனடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்போரின் விவரங்கள் வெளியிடப்படவில்லை எனில், வருமான வரி ஏய்ப்புக்கு அது வழிவகுக்கும். கருப்புப் பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிகள் பயனளிக்காது என்று தெரிவித்திருந்தது. 

உச்சநீதிமன்ற உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம். ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை ஒடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. அதிக அளவிலான நன்கொடையைப் பெற்ற விதம் குறித்து, பாஜக தற்போது பதிலளிக்கும் என்று நம்புகிறோம். இதன் மூலம், தொழிலதிபர்களுடனான பாஜகவின் தொடர்பு வெளிப்படும் என்றும் நம்புகிறோம்.
-பிரியங்கா சதுர்வேதி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்

பிரதமர் மோடி, நிதியமைச்சர் ஜேட்லி மற்றும் பாஜகவின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தகர்த்துள்ளது. அரசியல் நன்கொடைகளுக்கு வெளிப்படைத்தன்மையே அடிப்படை என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. பாஜக அரசின் சட்டம் தோல்வியை நோக்கிச் செல்கிறது. கருப்புப் பணத்தை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளாக வழங்குவோர், இனி அச்சமடைவர்.
-சீதாராம் யெச்சூரி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர்

உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், இந்த விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு விட்டது. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருப்போம்.
-நளின் கோலி,  பாஜக செய்தித் தொடர்பாளர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com