வாக்கு வங்கிக்காக பண்டிட்கள் மீதான தாக்குதலை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை: காஷ்மீரில் முழங்கிய மோடி

வாக்கு வங்கிக்காக காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். 
வாக்கு வங்கிக்காக பண்டிட்கள் மீதான தாக்குதலை காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை: காஷ்மீரில் முழங்கிய மோடி

வாக்கு வங்கிக்காக காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள் மீதான தாக்குதல்களை காங்கிரஸ் கட்சி கண்டுகொள்ளவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக ஜம்மு-காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியின் தவறான கொள்கை முடிவுகளால் தான் காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட்கள் தங்கள் சொந்த நிலத்தை விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு இங்குள்ள வாக்குவங்கியை மட்டுமே முக்கியமாக கருதியதால் தான் பண்டிட்கள் மீதான தாக்குதலை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பண்டிட்களுக்கு நடந்த அநீதியை யார் தட்டிக்கேட்பார்கள் என்ற தைரியத்தில் காங்கிரஸ் இருந்தது. பண்டிட்களுக்குான நீதியை காங்கிரஸ் கட்சியால் பெற்றுத் தர முடியுமா? கடந்த 1984 படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியால் நீதி பெற்றுத் தர முடியுமா?

ஆனால், இந்த காவலாளியின் அரசால் அவர்களுக்கு நீதி வழங்க முடியும். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நம்பி வந்து இங்கு குடியேறியுள்ளவர்களுக்கான குடியுரிமையை பெற்றுத் தர போதிய சட்டங்களை நிறைவேற்ற பாஜக அரசு தயார் நிலையில் உள்ளது. 

தேசியம் என்றால் சிலருக்கு அவமானமாக இருப்பதால் என்னை எதிர்க்கின்றனர். நமது ராணுவத்தின் மீதும் சந்தேகம் எழுப்பி அவமதிக்கின்றனர். தேசப் பாதுகாப்பு குறித்து நான் பேசுவது மகா கூட்டணிக்கு பிடிக்கவில்லை. ஆனால், கடந்த முறையை விட 3 மடங்கு வெற்றியை இம்முறை பாஜக பெறும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளேன்.  நீதி வழங்குவதாக கூறிக்கொண்டு காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களை முட்டாளாக்க நினைக்கிறது. தலைமுறைகளாக வாரிசு அரசியலை ஊக்குவித்து வருகிறது.

நாட்டை விட்டு ஜம்மு-காஷ்மீரை பிரிப்பதாக ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களின் குடும்பமும் கடந்த 3 தலைமுறைகளாக ஜம்மு-காஷ்மீரை அழித்துக்கொண்டு வருகிறது. அவர்களை வெளியேற்றுவதன் மூலம் தான் இம்மாநிலத்தின் வளர்ச்சி அடங்கியுள்ளது. அவர்கள் என்னை எவ்வளவு வசைபாடினாலும், நாட்டை பிரிக்க நினைக்கும் சூழ்ச்சி மட்டும் எப்போதும் நடக்காது. 

முதல்கட்ட தேர்தலின் போது அதிகளவிலான வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்தன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடி அளித்துள்ளீர்கள் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com