வி.வி.பாட் இயந்திரங்களை அமைக்கும் விவகாரம்: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு  சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்கும் விவகாரத்தில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு..
வி.வி.பாட் இயந்திரங்களை அமைக்கும் விவகாரம்: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு

புது தில்லி: வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு  சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்கும் விவகாரத்தில், மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தில்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் ஞாயிறன்று எதிர்க்கட்சிகளின் சார்பில் '‘ஜனநாயகத்தை பாதுகாப்போம்’ என்ற பெயரில் இந்த வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு தொடர்பான கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரதிநிதிகளும்  கலந்துகொண்டு பேசினர்.

தற்போதைய தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்தால் வேறொரு கட்சிக்கு வாக்குகள் விழுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

கருத்தரங்கின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

வாக்கு ஒப்புகை சரிபார்ப்பு இயந்திரங்களில் 7 வினாடிகள் வரை ஒளிர வேண்டிய விளக்குகளானது 3 வினாடிகளில் அணைந்து விடுகிறது.

சரியான வகையில் நேரடி களஆய்வு செய்து பரிசீலிக்காமல் ஆன்லைன் மூலம் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதுபோல் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க எங்களிடம் ஏராளமான புகார்கள் உள்ளன.

அவற்றில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி பிரச்சனை மிக முக்கியமானதாகும். எனவே,வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையில்  50 சதவீதம் அளவுக்கு வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு இயந்திரங்களை அமைக்க வேண்டும் என 21 எதிர்க்கட்சிகளும் ஒருமனதாக தீர்மானித்துள்ளன.

இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமானது போதிய அக்கறை காட்டவில்லை என்று நாங்கள் கருதுவைத்தால், இந்த கோரிக்கையை முன்வைத்து நாங்கள் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com