அஸ்ஸாம்: தேர்தல் பிரசாரத்துக்கு மாணவர்களை அனுப்பிய பள்ளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

அஸ்ஸாமில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பள்ளி மாணவர்கள் சீருடையுடன் பங்கேற்ற விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கல்வி வாரியத்துக்கு

அஸ்ஸாமில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், பள்ளி மாணவர்கள் சீருடையுடன் பங்கேற்ற விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க கல்வி வாரியத்துக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 இந்தச் சம்பவம் தொடர்பாக, இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு, காவல் இணை ஆணையரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கீர்த்தி ஜாலி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
 அஸ்ஸாமின் ஹைலகண்டி மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஆக்ஸ்போர்டு பள்ளியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத மாணவர்கள் பலர் சீருடையுடன் பங்கேற்றனர். பள்ளி செயல்படும் நேரத்தில் அவர்கள் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றனர். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தையும் மீறிய செயலாகும். பிரசாரக் கூட்டத்துக்காக மிக அதிக எண்ணிக்கையில் மக்களும் அங்கு வந்திருந்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றபோது, மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால், கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவித சம்பவங்கள் அங்கு நிகழவும் வாய்ப்பிருந்தது. ஆனால், ஆசிரியர்களுடன் சேர்த்து மாணவர்களையும் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குப் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது, கண்காணிப்பு மையத்துக்குக் கிடைத்த காணொலியின் மூலம் தெரியவந்துள்ளது.
 பள்ளியின் இந்த நடவடிக்கை முற்றிலும் அலட்சியமானதும், பொறுப்புணர்வு இல்லாததும் ஆகும். கல்வி அளிக்கும் பணியை அந்தப் பள்ளி அவமதித்துள்ளது. இந்த நடவடிக்கையால், பள்ளி மீது மாணவர்களின் பெற்றோர்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் பள்ளி நிர்வாகம் சீர்குலைத்துள்ளது. தனியார் பள்ளி மேலாண்மை சட்டத்தின்படி, அந்தப் பள்ளியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கல்வி வாரிய செயலருக்கு உத்தரவிடுகிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏற்கெனவே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் சிலர் பங்கேற்றதற்கு விளக்கம் கோரி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 10-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com