சபரிமலை விவகாரம்: திருவனந்தபுரத்தில் ஹிந்து அமைப்புகள் தர்னா

கேரளத்தில் இந்து அமைப்புகள், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து தர்னா போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.

கேரளத்தில் இந்து அமைப்புகள், சபரிமலை விவகாரத்தை முன்வைத்து தர்னா போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டன.
 சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற அமர்வு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு கேரளத்தில் ஹிந்து அமைப்புகளும், ஹிந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளும் இடதுசாரி அரசும் நடவடிக்கை மேற்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து அமைப்புகள் சபரிமலை கர்மா சமிதி என்ற பெயரில் ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி வந்தன.
 போராட்டம் நடத்திய ஹிந்து அமைப்புகளுக்கு எதிராக கேரள அரசு பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்ததுடன், அவர்கள் மீது சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
 இந்நிலையில், சபரிமலை விவகாரம் மீண்டும் கேரளத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் மாநில தலைமைச் செயலகம் முன்பு கூடிய ஏராளமான பெண்கள் உள்பட போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சபரிமலை ஐயப்பன் படத்தை கைகளில் ஏந்தியவாறு மாநில அரசுக்கு எதிராகவும், தீர்ப்புக்கு எதிராகவும் ஆவேசமாக கோஷமிட்டனர்.
 வரும் ஏப்.23 ஆம் தேதி கேரளத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் இந்த விவகாரத்தை ஹிந்து அமைப்புகள் கையில் எடுத்துள்ளன.
 இதுகுறித்து, கொளத்தூர் அத்வைத ஆசிரமம் அமைப்பின் மடாதிபதி சுவாமி சிதானந்தபுரி கூறுகையில், சபரிமலை விவகாரத்தை ஹிந்துக்கள் யாரும் மறந்து விடக்கூடாது. இப்போதும், சபரிமலைக்கு செல்லும் ஐயப்பப் பக்தர்கள், அரசு விதித்துள்ள போலீஸாரின் கடுமையான கெடுபிடிக்கு ஆளாக நேரிடுகிறது. ஐயப்ப பக்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இடதுசாரி அரசு கைவிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
 இதனிடையே, தர்னா போராட்டத்துக்கு எதிராக இடதுசாரி அரசு தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அனுப்பியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com