Enable Javscript for better performance
என்ன சொல்கின்றன தேர்தல் அறிக்கைகள்?- Dinamani

சுடச்சுட

  
  congress,_bjp

  பாஜக

   1. பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்வதில்லை என்ற கொள்கையில் உறுதி. பயங்கரவாதத்தை கையாள்வதில் பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம்.
   2. ஆயுதப் படைகளின் போர்த் திறனை வலுப்படுத்த தொடர் நடவடிக்கை. பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் நடைமுறை விரைவுபடுத்தப்படும்.
   3. மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக, அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், பௌத்தர்கள், சமணர்கள் மற்றும் சீக்கியர்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகுக்கும் குடியுரிமை திருத்த மசோதாவை நிறைவேற்ற உறுதி.
   4. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370 பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதி. அந்த மாநிலத்தில் நிரந்தர குடிமக்கள் அல்லாதோருக்கும், பெண்களுக்கும் எதிராக உள்ள 35ஏ சட்டப் பிரிவும் நீக்கப்படும்.
   5. 60 வயதுக்கு மேற்பட்ட சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகம். ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன்.
   6. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக மாற்ற உறுதி. 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பை 5 லட்சம் கோடி டாலராகவும், 2032-க்குள் 10 லட்சம் கோடி டாலராகவும் அதிகரிக்க இலக்கு.
   7. சபரிமலையின் பாரம்பரியம், நம்பிக்கை, வழிபாடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விரிவாக எடுத்துரைக்கப்படும். மத நம்பிக்கை தொடர்பான விவகாரங்களில், அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
   8. அரசமைப்புச் சட்ட கட்டமைப்புக்கு உள்பட்டு, அயோத்தியில் ராமர் கோயிலை விரைந்து கட்ட நடவடிக்கை.
   9. பாரம்பரியத்தையும், நவீன கால வாழ்க்கை முறையையும் ஒருங்கிணைக்கும் வகையில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். முத்தலாக் தடை சட்டத்தை இயற்றுவதில் உறுதி.
   10. நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம். நீர் மேலாண்மை பிரச்னைகளைத் தீர்க்க தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.

  காங்கிரஸ்

   1. வருவாய் உறுதி திட்டத்தின்கீழ், 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.72,000 நிதியுதவி.
   2. 2020, மார்ச் மாதத்துக்குள் 24 லட்சம் அரசுப் பணி காலியிடங்கள் நிரப்பப்படும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க தனி அமைச்சகம். அரசுப் பணி தேர்வுகளுக்கான கட்டணம் ஒழிக்கப்படும்.
   3. விவசாயத்துக்கு தனி பட்ஜெட். நாடு முழுவதும் பயிர்க்கடன் தள்ளுபடி.
   4. அனைத்து குடிமக்களுக்கும் இலவச மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள், மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காக சுகாதார உரிமைச் சட்டம்.
   5. ஒரே விகித சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) அமல். அத்தியாவசிய பொருள்கள், சேவைகளுக்கு முழு வரி விலக்கு.
   6. பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். ஆயுதப்படைகளை நவீனப்படுத்தும் திட்டங்கள் விரைவுபடுத்தப்படுவதுடன், வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும்.
   7. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச, கட்டாயக் கல்வி உறுதி. கல்வித் துறைக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 6 சதவீதம் ஒதுக்கப்படும்.
   8. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்படும். மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை.
   9. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆயுதப்படை சிறப்புச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும்.
   10. 5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் உள்பட பாதுகாப்புத் துறை ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை
   நடத்தப்படும்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  1. தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.18,000-க்கு குறையாமல் நிர்ணயிக்கப்படும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை.
   2. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நடவடிக்கை.
   3. விவசாயிகள், தங்களது விளைப்பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பதற்கான உரிமை உறுதி செய்யப்படும். குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்திச் செலவை விட 50 சதவீதம் அதிகமாக நிர்ணயிக்கப்படும்.
   4. பொது விநியோக திட்டத்தின்கீழ், ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.2 என்ற விலையில், ஒரு குடும்பத்துக்கு தலா 35 கிலோ உணவு தானியங்கள் அல்லது தனிநபருக்கு தலா 7 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும்.
   5. இலவச மருத்துவ சிகிச்சை கிடைக்கப் பெறுவது, மக்களுக்கான உரிமையாக்கப்படும். பொது சுகாதாரத்துக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து 5 சதவீத நிதி ஒதுக்கப்படும். தனியார் மருத்துவ காப்பீடு முறை ஒழிக்கப்படும்.
   6. அரசு கல்வி முறை பெரிய அளவில் விரிவுபடுத்தப்படும். கல்வி முறையில் மதவாதம் ஒழிக்கப்படும். கல்வித் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும்.
   7. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவுகளை நீக்கவோ, மறுஆய்வு செய்யவோ முயன்றால், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
   8. பணக்காரர்களுக்கும், பெரு நிறுவனங்களுக்கும் வரி அதிகரிக்கப்படும். செல்வ வரி மீண்டும் அமல்படுத்தப்படும்.
   9. அரசுத் துறை நிறுவனங்கள், தனியார்மயமாக்கப்படுவது தடுக்கப்படும். பாதுகாப்பு, எரிசக்தி, ரயில்வே, அடிப்படை சேவைகள் உள்ளிட்ட துறைகளில் தனியார் பங்களிப்பை திரும்பப் பெற நடவடிக்கை.
   10. அமெரிக்காவுடன் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு துறை ஒப்பந்தங்கள் அனைத்தும் மறுஆய்வு செய்யப்படும். பாதுகாப்பு தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதலில் வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்படும்.

  இந்திய கம்யூனிஸ்ட்

  1. வேளாண் துறை தொடர்பாக, எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அளித்துள்ள பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். மத்தியிலும், மாநிலங்களிலும் விவசாயத்துக்கு தனி பட்ஜெட்.
   2. 15-ஆவது இந்திய தொழிலாளர் மாநாட்டின் பரிந்துரைகளின்படி, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்கப்படும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000-ஆக உயர்த்தப்படும். மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
   3. தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு அமைப்பு, ஊழல் கண்காணிப்பு ஆணையம், தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு ஆகியவை சுதந்திரமாக செயல்படுவது உறுதி செய்யப்படும்.
   4. நாடாளுமன்றம், மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க சட்டமியற்றப்படும்.
   5. பெரு நிறுவனங்களின் கோரிக்கைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்பட்டு வரும் "நீதி ஆயோக்' கலைக்கப்பட்டு, மீண்டும் திட்டக் குழு கொண்டுவரப்படும்.
   6. அரசுத் துறையில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படுவது உறுதி செய்யப்படும். தனியார் துறையிலும் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும்.
   7. தேசிய சிறுபான்மையினர் நல ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
   8. கல்விக்கான நிதி ஒதுக்கீடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக அதிகரிக்கப்படும். பாடத்திட்டங்களில் பகுத்தறிவையும், அறிவியல்ரீதியிலான கண்ணோட்டத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
   9. சுகாதாரத் துறைக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் ஒதுக்கப்படும். தனியார் மருத்துவச் சேவையை ஒழுங்குபடுத்தவும், மருத்துவ கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நடவடிக்கை.
   10. நாட்டின் பன்முக கலாசாரத்தையும், அனைத்து மொழிகளையும் பாதுகாக்க நடவடிக்கை. நதிகள் இணைப்புக்கு தேசிய அளவில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai