கோயிலில் துலாபாரம் கொடுக்கும் போது தலையில் காயம்: காங்கிரஸ் எம்.பிக்கு 11 தையல்கள் 

கேரளாவில் கோயில் ஒன்றில் 'துலாபாரம்' கொடுக்கும் போது தலையில் காயம் ஏற்பட்டு,  காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான சசி தரூருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளது.
கோயிலில் துலாபாரம் கொடுக்கும் போது தலையில் காயம்: காங்கிரஸ் எம்.பிக்கு 11 தையல்கள் 

திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் ஒன்றில் 'துலாபாரம்' கொடுக்கும் போது தலையில் காயம் ஏற்பட்டு,  காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான சசி தரூருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக இரண்டு முறை எம்.பியாகத் தேர்ந்தடுக்கப்பட்டவர் சசி தரூர். தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

கேரளாவில் உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரமானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தரூர் குறிப்பிட்ட பகுதியில் உள்ள முக்கியமான கோயில் ஏதாவதொன்றில் 'துலாபாரம்' (எடைக்கு எடை பொருட்கள் கொடுத்தல்) செய்து பிரசாரத்தை துவங்குகிறார். அந்த வரிசையில் கழக்கூட்டம் தொகுதியில் உள்ள கோயிலில் சமீபத்தில் துலாபாரம் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில் கோயில் ஒன்றில் 'துலாபாரம்' கொடுக்கும் போது தலையில் காயம் ஏற்பட்டு,  சசி தரூருக்கு 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. 

திங்களன்று தம்பனூர் பகுதியில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் சசி தரூர் தனது எடைக்கு சமமாக வாழைப்பழத்தை 'துலாபாரம்'  செலுத்துவதற்காக, ஆலயத்தில் இருந்த தராசுத் தட்டில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தராசுத் தட்டு அறுந்து சசி தரூர் தலையில் விழுந்தது. இதன் காரணமாக அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. 

இதனால் அவர் உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவிக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் வேறொரு பல்நோக்கு மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் 11 தையல்கள் போடப்பட்டுள்ளது. அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக சசி தரூரின் தேர்தல் பிரசாரப் பயணமானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com