சபரிமலை விவகாரத்தில் பக்தர்களை பிரதமர் ஏமாற்றிவிட்டார்: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பக்தர்களை ஏமாற்றிவிட்டதாக கேரள காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

சபரிமலை விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பக்தர்களை ஏமாற்றிவிட்டதாக கேரள காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
 மேலும், இந்த விவகாரத்தில் மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும், மத்தியில் ஆளும் பாஜகவும் ரகசிய கூட்டணி அமைத்து செயல்பட்டதாகவும் காங்கிரஸ் சாடியுள்ளது.
 இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் கூறியதாவது:
 சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து நாடகமாடி வருகிறார்.
 இந்த விவகாரத்தை நான் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 4-ஆம் தேதி எழுப்பினேன். சபரிமலை பக்தர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இந்த விவகாரத்தில் அரசு தலையிட வேண்டும் என்று கோரினேன்.
 ஆனால், இதுகுறித்து பிரதமரோ, அவரது அமைச்சர்களோ நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
 காலாவதியான முத்தலாக் மசோதாவை மீண்டும் புதுப்பிப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தில் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. அதுபோல், இந்த விவகாரத்திலும் மத்திய அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம்.
 மக்களின் நம்பிக்கையை காரணம் காட்டி, மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க முடியும்.
 ஆனால் அப்போது விட்டுவிட்டு, தற்போது சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக பிரதமர் கூறுகிறார்.
 அந்த நடவடிக்கையை அவர் எப்போதோ எடுத்திருக்க வேண்டும்; ஆனால், எடுக்கவில்லை.
 பொதுமக்கள் எந்த வகையான நாடகத்தையும் பொறுத்துக் கொள்வார்கள்; ஆனால், சுவாமி ஐயப்பனின் பெயரால் நாடகமாடுவதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
 சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உடனுக்குடன் அமல்படுத்துவதற்கு பதில், அதற்காக கேரள கம்யூனிஸ்ட் அரசு கால அவகாசம் கோரியிருக்கலாம்.
 எனினும், அந்த உத்தரவை கேரள அரசு அவசரமாக அமல்படுத்தியது; அதனைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். மற்றும் சங் பரிவார அமைப்புகள் அமைதியைக் குலைத்தன.
 உண்மையான ஐயப்ப பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 இந்த விவகாரத்தில், கேரள அரசும், மத்திய அரசும் ரகசியக் கூட்டணி அமைத்து செயல்பட்டன; சபரிமலை பிரச்னை மிக மோசமான நிலையை அடைந்ததற்கு இரு அரசுகளுமே காரணம் ஆகும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com