சுடச்சுட

    

    ஜெயப்ரதா குறித்து சர்ச்சை கருத்து: ஆஸம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

    By  நமது நிருபர், புது தில்லி  |   Published on : 16th April 2019 01:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    akhan

    உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெயப்ரதாவுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக சமாஜவாதி கட்சி மூத்த தலைவரும், ராம்பூர் தொகுதி வேட்பாளருமான ஆஸம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.
     சர்ச்சைக் கருத்து: இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலையொட்டி, உத்தரப் பிரதேசத்தில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ராம்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் ஆஸம் கான், தன்னை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஜெயப்பிரதா குறித்து கடுமையாக விமர்சித்தார்.
     "ஜெயப்ரதாவின் உண்மை முகத்தை அறிந்து கொள்ள மக்களுக்கு 17 ஆண்டுகள் எடுத்திருக்கிறது' என்று கூறியதுடன், அவரது ஆடை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
     சமூக ஊடகங்களில் வெளியான அவரது இந்தப் பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
     நோட்டீஸ்: இதுதொடர்பாக ஊடகங்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியான செய்திகளின் அடிப்படையில், தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, ஆஸம் கானுக்கு திங்கள்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
     அதில், "பெண் அரசியல்வாதி குறித்து பாலியல் ரீதியாகப் பேசியுள்ளீர்கள். கடந்த காலத்திலும் இதுபோன்று தரக்குறைவான வகையில் பேசியுள்ளீர்கள். தங்களது கருத்துகள் நாகரிகமற்றதாகவும், பொறுப்பற்றதாகவும், மகளிரின் மரியாதை மற்றும் மாண்புக்கு இழுக்கு செய்வதாகவும் உள்ளன. பொறுப்புள்ள பதவியில் இருந்து கொண்டு பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டித்தக்கதாகும். உங்களது நடவடிக்கை குறித்த உரிய காரணத்தை தேசிய மகளிர் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.
     தேர்தல் ஆணையத்துக்கு கடிதம்: இந்த விவகாரம் தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். அதில், "ராம்பூர் தொகுதி சமாஜவாதி வேட்பாளர் ஆஸம் கான், அத்தொகுதியின் பாஜக வேட்பாளர் ஜெயப்ரதா குறித்து மோசமான முறையில் பேசியுள்ளார். மேலும், "மார்ஃபிங்' செய்யப்பட்ட புகைப்படங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது, இந்திய தண்டனையியல் சட்டத்தின் 509-ஆவது பிரிவின்படி குற்றமாகும். தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகளை ஆஸம் கான் மீறியுள்ளார். எனவே, இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கோரப்பட்டுள்ளது.
     ஆஸம் கான் மீது வழக்கு: இதனிடையே, ஆஸம் கானுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்ப பிரதேசத்தின், ராம்பூர் மாவட்ட ஆட்சியர் ஆஞ்சநேய குமார் சிங் தெரிவித்தார்.
     "இந்திய தண்டனையியல் சட்டத்தின் 509-ஆவது பிரிவின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழும் ஆஸம் கானுக்கு எதிராக திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
     தில்லி மகளிர் ஆணையம் கோரிக்கை: ஆஸாம் கான் விவகாரம் குறித்து தில்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது சுட்டுரையில், "ஆஸம் கான் தெரிவித்துள்ள கருத்து வெட்கத்துக்குரியது. இதே கருத்தை அவரது மகள் குறித்தோ, சகோதரி குறித்தோ அவர் தெரிவிப்பாரா? அரசியலில் மிகவும் தரம் தாழ்ந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவரை சிறையில் அடைக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
     நிரூபித்தால் தேர்தலில் போட்டியிட மாட்டேன்
     இந்த விவகாரம் குறித்து ஆஸம் கான் கூறுகையில், "என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் போது எந்தவொரு நபரின் பெயரை குறிப்பிட்டோ, எவர் குறித்தும் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பேசவில்லை.
     தில்லியில், உடல்நலம் குன்றிய நிலையில் இருக்கும் ஒருவர் குறித்து தான் பேசினேன். அந்த நபர் ஒருமுறை, 150 துப்பாக்கிகளைக் கொண்டு என் மீது தோட்டாக்களைப் பாய்ச்சுவதாகக் கூறியிருந்தார்.
     அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர் என்பது அறிந்த ஒன்றே. கால்சட்டை என்பது ஆண்கள் அணிவது. இந்த விவகாரத்தை புரிந்துகொள்ள மக்களுக்கு நீண்டகாலம் ஆகும் என்று கூறினேன். எனது கட்சியினருமே இந்தக் கருத்தை தவறாகப் புரிந்துகொண்டனர்.
     நான் யார் பெயரையாவது குறிப்பிட்டு, கேவலப்படுத்தும் வகையில் பேசியிருப்பதாக நிரூபித்தால் தேர்தலில் போட்டியிடமாட்டேன்' என்றார்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai