"பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை பார்த்துவிட்டு தடை குறித்து முடிவெடுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

"பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை பார்த்துவிட்டு தடை குறித்து முடிவெடுங்கள்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

"பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை முழுவதும் பார்த்தபிறகு, அதற்குத் தடை விதிப்பது குறித்து முடிவெடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை முழுவதும் பார்த்தபிறகு, அதற்குத் தடை விதிப்பது குறித்து முடிவெடுங்கள் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு குறித்த "பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை, மக்களவைத் தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் கடந்த 10-ஆம் தேதி தடை விதித்தது. இதை எதிர்த்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
 இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, ""படத்தின் முன்னோட்டக் காட்சியை (டிரெய்லர்) மட்டும் பார்த்துவிட்டு, தேர்தல் ஆணையம் அதற்குத் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு முழு படத்தையும் திரையிட்டுக் காண்பிக்க தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளனர்'' என்று வாதிட்டார்.
 இதைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, "முழு படத்தையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தார்களா' என்று அவர்கள் தரப்பு வழக்குரைஞர் அமித் சர்மாவிடம் கேள்வி எழுப்பியது. அதற்கு அமித் சர்மா பதிலளிக்கையில், ""முழு படத்தையும் காண வாய்ப்பு கிடைக்கவில்லை. படத்தின் முன்னோட்டக் காட்சியை அடிப்படையாகக் கொண்டே, படத்துக்குத் தடை விதிக்கப்பட்டது'' என்றார்.
 இதையடுத்து நீதிபதிகள் அமர்வு, ""முழு திரைப்படத்தையும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்ட பிறகு, படத்தைத் தடை செய்யலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து வரும் 19-ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அந்த முடிவு தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஆராய்ந்த பின்னர், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தகுந்த முடிவெடுக்கும்'' என்று உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 22-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
 பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக் காலம் தொடங்கி, அவர் அரசியலில் தடம் பதித்தது, பிரதமராகப் பதவி வகித்தது வரையிலான வாழ்க்கை வரலாறு குறித்து உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், 23 மொழிகளில் நாடு முழுவதும் வெளியாக இருந்தது. ஹிந்தி இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கிய இந்தத் திரைப்படத்தை சுரேஷ் ஓபராய் மற்றும் சந்தீப் சிங் உள்ளிட்டோர் தயாரித்தனர். இந்தத் திரைப்படத்தில் நடிகர் விவேக் ஓபராய், பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com