ஜம்மு-காஷ்மீர்: கிஷ்துவாரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாரில், ஆர்எஸ்எஸ் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த 6 நாள்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை தளர்த்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்துவாரில், ஆர்எஸ்எஸ் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த 6 நாள்களாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை தளர்த்தப்பட்டது.
 கிஷ்துவார் நகரில் உள்ள மருத்துவமனையில் பயங்கரவாதிகள் கடந்த 9-ஆம் தேதி நடத்திய தாக்குதலில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திரகாந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனால், அந்தப் பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்கவும், கடந்த 6 நாள்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை சிறிது தளர்த்தப்பட்டது. இது தொடர்பாக, மூத்த அதிகாரிகள் கூறுகையில், ""கிஷ்துவாரில் கடந்த 6 நாள்களாக முடக்கப்பட்டிருந்த இணையதள வசதிகள், இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளன. மாவட்டம் முழுவதும் பிறக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு, திங்கள்கிழமை மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தளர்த்தப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.
 ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட காலத்தில், அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மாவட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவை முழுவதுமாகத் திரும்பப் பெறுவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதே வேளையில், ஆர்எஸ்எஸ் நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்'' என்றனர்.
 கிஷ்துவார் மக்களவைத் தொகுதியில் வரும் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக, தேர்தல் பிரசாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 12-ஆம் தேதி ஒரு மணி நேரமும், கடந்த ஞாயிற்றுக்கிழமை சில மணி நேரங்களும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com