தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓய்ந்தது தேர்தல் பரப்புரை


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று (செவ்வாய்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. 

17-ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வந்தனர். 

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 

தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதிக்கும் ஏப்ரல் 18-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான தேர்தல் பரப்புரையும் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதன்மூலம், தேர்தல் கட்டுப்பாடுகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 4 தொகுதிகளுக்கு மே 19-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதிகளில் இரண்டு நாட்களுக்கு பிரசாரம் செய்யக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, கட்சித் தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆகிய வெளி ஆட்கள் அந்தந்த தொகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், 7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. 

புதுச்சேரியில் 144 தடை உத்தரவு: 

மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுவதை முன்னிட்டு புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி காலை 9 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com