பாலாகோட் தாக்குதல்: ரஃபேல் இருந்திருந்தால் மேலும் சாதகமாக மாறியிருக்கும்

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், பாலாகோட் தாக்குதலின் முடிவுகள் நமது நாட்டுக்கு மேலும் சாதகமாக அமைந்திருக்கும் என்று
பாலாகோட் தாக்குதல்: ரஃபேல் இருந்திருந்தால் மேலும் சாதகமாக மாறியிருக்கும்

இந்திய விமானப் படையில் ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், பாலாகோட் தாக்குதலின் முடிவுகள் நமது நாட்டுக்கு மேலும் சாதகமாக அமைந்திருக்கும் என்று விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா கூறினார்.
 ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில், சிஆர்பிஎஃப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர்.
 இத்தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் பிப்ரவரி 26-ஆம் தேதி இந்திய விமானப் படை அதிரடி தாக்குதல் நடத்தி, பயங்கவாதிகளின் முகாம்களை அழித்தது.
 இந்நிலையில், மறைந்த விமானப் படை மார்ஷல் அர்ஜன் சிங்கின் 100-ஆவது பிறந்த தினத்தையொட்டி, தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, பி.எஸ்.தனோவா பேசியதாவது:
 பாலாகோட் நடவடிக்கையின்போது, நமது விமானப் படையிடம் தொழில்நுட்பம் பலமாக இருந்தது. இதனால், இலக்குகள் மீது ஆயுதங்கள் மிகத் துல்லியமாக செலுத்தப்பட்டன. மிக்-21, மிராஜ்-2000 ரக போர் விமானங்களை தொடர்ந்து மேம்படுத்தியன் மூலம் நம்மால் சிறப்பாக செயல்பட முடிந்தது.
 அதேசமயம், ரஃபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால், பாலாகோட் நடவடிக்கையின் முடிவுகள் நமக்கு மேலும் சாதகமாக அமைந்திருக்கும்.
 ரஃபேல் போர் விமானங்களும், எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளும் விமானப் படையில் இணைக்கப்படும்போது, நமது வல்லமை மேலும் அதிகரிக்கும் என்றார் பி.எஸ்.தனோவா.
 ரஷியாவிடமிருந்து எஸ்-400 டிரையம்ப் ரக ஏவுகணைகளை வாங்க, இந்தியா கடந்த ஆண்டு அக்டோபரில் ஒப்பந்தம் மேற்கொண்டது.
 400 கி.மீ. வரை பாயும் இந்த ஏவுகணைகள், எதிரி நாட்டின் போர் விமானம், ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்க வல்லவை.
 இதேபோல், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பேச்சுவார்த்தை அளவில் இருந்து வந்த ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தம், பாஜக ஆட்சியில் கடந்த 2016, செப்டம்பரில் கையெழுத்தானது. இதன்படி, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com