மோடியின் பிரசாரத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது? ராகுல் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது? என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
மோடியின் பிரசாரத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது? ராகுல் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரத்துக்கு எங்கிருந்து நிதி வருகிறது? என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
 உத்தரப் பிரதேச மாநிலம், பத்தேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் பப்பரை ஆதரித்து ராகுல் காந்தி, ஆக்ராவில் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
 எங்கு பார்த்தாலும், நரேந்திர மோடி தொடர்பான பிரசார விளம்பரமாகத்தான் இருக்கிறது. இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது? தொலைக்காட்சியில் 30 வினாடி விளம்பரம் அல்லது பத்திரிகையில் விளம்பரம் கொடுப்பதற்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகிறது. அப்படியிருக்கையில், பிரதமர் தொடர்பான விளம்பரத்துக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? மோடியின் பையில் இருந்து அந்த பணம் கொடுக்கப்படவில்லை.
 நாட்டிலுள்ள விவசாயிகளை மோடி அழித்து விட்டார். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அவர் ஆட்சிக்கு வந்துள்ளார். ஆனால், நான் மக்களின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என வாக்குறுதி அளிக்க மாட்டேன். கொடுக்க முடிகிற தொகையை மட்டுமே தெரிவிப்பேன். மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.72,000 ஆயிரத்தை டெபாசிட் செய்வோம்.
 நியாய் திட்டம் குறித்து நான் தெரிவித்தபோது, அதுகுறித்து மோடி கேள்வியெழுப்பினார். அதற்கு பணம் எங்கிருந்து வரும் எனக் கேட்டார். நடுத்தர மக்களின் பைகளில் இருந்து அந்தப் பணம் எடுக்கப்பட மாட்டாது. வருமான வரியும் அதிகரிக்கப்பட மாட்டாது. அந்த திட்டத்துக்கான தொகை, மோசடி தொழிலதிபர்கள் அனில் அம்பானி, மெஹூல் சோக்ஸி, நீரவ் மோடி ஆகியோரிடம் இருந்து எடுத்து அளிக்கப்படும்.
 மோடி அறிவித்த ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யும் திட்டத்தால் யாராவது பயனடைந்தார்களா? ஆனால் நான் தெரிவித்துள்ள நியாய் திட்டத்தால், 20 சதவீத ஏழை மக்கள் பயனடைவார்கள். நாடு முழுவதும் 22 லட்சம் அரசு வேலைகள் காலியாக இருக்கின்றன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், அனைத்து பணியிடங்களும் நிரப்பப்படும். இதுதவிர்த்து, பஞ்சாயத்து அளவில் புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
 நாள் முழுவதும் விவசாயிகள் உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்கள், பிறரால் எடுத்து செல்லப்படுகின்றன. அவர்கள் (பாஜகவினர்) அனில் அம்பானி உள்ளிட்டோருக்காக ஒரு இந்தியாவையும், சாதாரண மக்களுக்காக இன்னொரு இந்தியாவையும் உருவாக்க விரும்புகின்றனர்.
 தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ய முடியுமெனில், விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்ய முடியும். கடனை செலுத்தாத விவசாயிகள், சிறையில் அடைக்கப்படும்போது, அதை தவறை செய்யும் தொழிலதிபர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்.
 மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்ததும், விவசாயத்துக்காக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். முந்தைய தேர்தலில் நல்ல காலம் வர போகின்றன என்று மோடி பிரசாரம் செய்தார். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பாதுகாவலரே திருடராகி விட்டார். மக்களவைத் தேர்தலானது, காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம், பாஜகவின் வெறுப்புணர்வு இடையே நடக்கும் போட்டியாகும். இதில் காங்கிரஸ் வென்று, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் ராகுல் காந்தி.
 குஜராத்தில்...:இதையடுத்து, குஜராத் மாநிலம், மகுவாவில் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைந்ததும், வறுமைக்கு எதிராக துல்லியத் தாக்குதல் தொடுக்கப்படும், ஏழைகளுக்கு ஆண்டுதோறும் நியாய் திட்டத்தின்கீழ் ரூ.72,000 அளிக்கப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com