சுடச்சுட

  

  கருப்புப் பண வழக்கு: கௌதம் கேத்தானுக்கு நிபந்தனை ஜாமீன்

  By DIN  |   Published on : 17th April 2019 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gk

  ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கௌதம் கேத்தானுக்கு, கருப்புப் பணம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வழக்கில் தில்லி சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
   ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கௌதம் கேத்தான் மீது வருமான வரித்துறை கருப்புப் பண சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் கௌதம் கேத்தானுக்கு எதிராக அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்துள்ளது.
   இந்த வழக்கில், தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி கௌதம் கேத்தான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கௌதம் கேத்தான் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்கள் பி.கே. துபே, சித்தார்த் லூத்ரா ஆகியோர் வாதாடுகையில், "எப்போது விசாரணைக்கு அழைத்தாலும், கௌதம் கேத்தான் ஆஜராவார்' என்று உறுதியளித்தனர்.
   அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு அரசு வழக்குரைஞர்கள் என்.கே. மட்டா, சம்வேத்னா வர்மா ஆகியோர் ஆஜராகி வாதாடுகையில், "விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், கௌதம் கேத்தானுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், நீதியிலிருந்து அவர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது. ஆதலால் கௌதம் கேத்தானுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது' என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
   இதைக்கேட்டுவிட்டு நீதிபதி கூறுகையில், "தனிநபர் உறுதித் தொகை ரூ.25 லட்சம் மற்றும் அதே மதிப்பில் மேலும் 2 உறுதித் தொகை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் கேத்தானுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது. அதேபோல், சாட்சிகளை தொடர்பு கொள்ளவோ அல்லது கலைக்கவோ கூடாது. விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளும் கேத்தானுக்கு விதிக்கப்படுகிறது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai