சுடச்சுட

  

  சிவகங்கையில் தேர்தல் நெறிமுறை மீறல்: தேர்தல் ஆணையத்தில் வருமான வரி ஆணையர் புகார்

  By  புது தில்லி / சென்னை,  |   Published on : 17th April 2019 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தேர்தல் நெறிமுறைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஈடுபட்டு வருவதாக வருமான வரித் துறை ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா (நொய்டா) குற்றம்சாட்டியுள்ளார்.
   இதுதொடர்பாக முதுநிலை துணை தேர்தல் ஆணையர் உமேஷ் சின்ஹாவுக்கு அவர் புகார் மனுவையும் அனுப்பியுள்ளார்.
   இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு சிவகங்கை தொகுதியில் நேர்மையாக தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
   நொய்டா வருமான வரித் துறை ஆணையரும், இந்திய வருவாய்ப் பணி அதிகாரியுமான எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா தரப்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ள அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
   சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியில் தனது மகனை வெற்றி பெறச் செய்வதற்காக பல்வேறு சட்டவிரோதச் செயல்களை சிதம்பரம் அரங்கேற்றி வருகிறார். குறிப்பாக, மளிகைக் கடை உள்ளிட்ட இடங்களில் கருப்புப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு, அவரது சார்பில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, சிதம்பரம் தரப்புக்கு எதிராக 67 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் பேரில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய மாவட்ட தேர்தல் அதிகாரியோ, சிதம்பரத்துடன் ரகசியக் கூட்டணி வைத்துக் கொண்டு அவற்றை கண்டும், காணாமல் இருக்கிறார்.
   மாநிலங்களவை ஆவணங்களிலும், இதர அரசு ஆவணங்களிலும் சிதம்பரத்தின் பெயர் ப.சிதம்பரம் என்றே அதிகாரப்பூர்வமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்புமனுத் தாக்கலின்போது கார்த்தி சிதம்பரம் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் தனது தந்தையின் பெயரை அவ்வாறு குறிப்பிடாமல் சிதம்பரம் என்றே குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி உண்மையான சொத்து விவரங்களை தெரிவிக்கவில்லை என்பதோடு பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றதையும் கார்த்தி சிதம்பரம் குறிப்பிடவில்லை. ஆனால், அதை எதையுமே கருத்தில் கொள்ளாமல் அவரது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
   சிவகங்கை தொகுதியில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்காக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நான் (ஸ்ரீவஸ்தவா) ஒத்துழைக்கத் தயாராக உள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   ப. சிதம்பரத்துக்கு எதிராக எஸ்.கே.ஸ்ரீவஸ்தவா குற்றம்சாட்டுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே 2014-இல் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோதே அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai