சுடச்சுட

  

  தேர்தல் பிரசாரத்துக்குத் தடை: மாயாவதி மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

  By DIN  |   Published on : 17th April 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  News_7_supremecourt

  தேர்தல் பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தொடுத்த மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
   மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், மதம், ஜாதி அடிப்படையில் கருத்துகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஷார்ஜாவில் வாழும் வெளிநாட்டு வாழ் இந்தியர் சார்பில் பொது நல மனு தொடுக்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி விசாரித்தபோது, மதம், ஜாதி அடிப்படையில் கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் பேசினாலும், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
   இதன்படி, மத அடிப்படையில் தெரிவித்த கருத்துகளுக்காக பாஜக மூத்த தலைவர்களான உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு நாடு முழுவதும் 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தடை விதித்தது. மாயாவதிக்கும் 48 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதேபோல், பாஜக வேட்பாளரும், நடிகையுமான ஜெயப்ரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜவாதி மூத்த தலைவர் ஆஸம்கானுக்கும் பிரசாரம் செய்ய 72 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது.
   தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மாயாவதி சார்பில் மனு தொடுக்கப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வால் எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது மாயாவதியின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மேலும், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக தனியாக வேறு மனுவை மாயாவதி தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்.
   நீதிபதிகள் திருப்தி: இதையடுத்து வெறுப்புணர்வு கருத்துகளை வெளியிட்டு வரும் அரசியல்வாதிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருப்பதற்கு நீதிபதிகள் திருப்தி தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், "தேர்தல் ஆணையம் தற்போது தூக்கத்தில் இருந்து விழித்து கொண்டு, அரசியல்வாதிகளுக்கு பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது.
   இந்த விவகாரத்தில் மேற்கொண்டு, உச்சநீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை' என்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai