சுடச்சுட

  

  பாகிஸ்தான் பற்றி பேசுவதை மோடி நிறுத்த வேண்டும்: ஜோதிராதித்ய சிந்தியா

  By DIN  |   Published on : 17th April 2019 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jothi


  தேர்தல் பிரசாரத்தில் பாகிஸ்தான் குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்திவிட்டு, வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்னை போன்றவற்றில் பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
  மேற்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளரான சிந்தியா, பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள நகினா நகரில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
  உத்தரப் பிரதேசத்தில் தனது வலிமையை அதிகரித்துக்கொள்ளவே காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுகிறது. கட்சியின் கொள்கைகள், கட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் திறன், பிரசார யுக்திகள் ஆகியவை காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
  நாட்டில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டமே முக்கியப் பிரச்னையாக உள்ளது. விவசாயிகள் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன. இதனால், பாகிஸ்தான் குறித்து மட்டும் பிரசாரத்தில் பேசாமல், உள்நாட்டுப் பிரச்னைகள் குறித்தும், பிரதமர் மோடியும், மற்ற பாஜக தலைவர்களும் பேச வேண்டும். பயங்கரவாதத்தைப் பொருத்தவரையில், அனைத்து கட்சிகளும் ஓரணியிலேயே நிற்கின்றன. இதில், பாஜக, காங்கிரஸ் என்ற கட்சி பேதங்கள் கிடையாது. எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவருக்கு இந்தியன்' என்ற உணர்வே மேலோங்கி இருக்கும்.
  ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாயை உறுதி செய்யும் நியாய்' திட்டம், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் அல்லாமல், நாடு முழுவதும் காங்கிரஸுக்கு மிகப் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும் என்று நம்புகிறோம். வெறும் தேர்தல் ஆதாயத்துக்காக மட்டும் இத்திட்டத்தை காங்கிரஸ் அறிவிக்கவில்லை. நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே, இத்திட்டத்தை காங்கிரஸ் முன்மொழிந்துள்ளது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ. 72,000 வழங்கும் நியாய்' திட்டத்துக்கு ரூ.3.60 லட்சம் கோடி செலவாகும் எனத் தெரிகிறது. இந்த நிதியைத் திரட்ட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு செய்ய முடியும். அனைத்துக் கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுவது, பாஜகவுக்கே சாதகம் என்ற வாதத்தை ஏற்க முடியாது. வரும் மே 23-ஆம் தேதியன்று, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியே மத்தியில் ஆட்சியமைக்க உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai