சுடச்சுட

  

  மசூதியில் பெண்களுக்கு அனுமதியளிக்கும் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  By DIN  |   Published on : 17th April 2019 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  News_7_supremecourt

  மசூதிகளில் பெண்களை அனுமதிக்க உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
   உச்சநீதிமன்றத்தில் மகாராஷ்டிர மாநிலம், புணேயை சேர்ந்த தம்பதி ஜூபைர், யாஷ்மீன் ஆகியோர் இதுதொடர்பாக மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
   மதம், இனம், ஜாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில், நாட்டு மக்கள் யாருக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணியத்துடனும், சம மரியாதையுடனும் வாழ்வது அடிப்படை உரிமையாகும். ஆதலால், மசூதிகளுக்குள் செல்ல முஸ்லிம் பெண்களுக்கு தடை விதிக்க முடியாது. மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு வழிபாடு நடத்த தடை விதித்திருப்பது சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
   இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஏ. பாப்தே தலைமையிலான அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர்களின் வழக்குரைஞரை பார்த்து, வெளிநாடுகளில் உள்ள மசூதிகளில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதி தரப்படுகிறதா? என கேள்வியெழுப்பினர். இதைக் கேட்ட மனுதாரர்களின் வழக்குரைஞர், புனித மெக்கா மசூதிக்குள்ளும், கனடாவிலுள்ள மசூதிக்குள்ளும் முஸ்லிம் பெண்கள் செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது என்றார். இதன் பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:
   சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த காரணத்துக்காகவே, மனுதாரரின் மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். இந்த மனு குறித்து விளக்கம் கேட்டு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றனர்.
   முன்னதாக, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான மனு மீது உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும், கோயிலுக்குள் செல்ல பெண்களுக்கு தடை விதிப்பது பாலின பாகுபாட்டுக்கு இணையான செயல் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai