சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா பாஜக சார்பில் போட்டி

  By DIN  |   Published on : 17th April 2019 05:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sadhvi_Pragya_Singh_Thakur_PTI


  மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா தாகுர் பாஜக சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். 

  மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிராக்யா தாகுர், மத்தியப் பிரதேச மாநிலம் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்தார். 

  அதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் உட்பட 4 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவிக்கவில்லை. அதற்கான அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. அதனால், போபால் தொகுதியில் சாத்வி பிராக்யா தாகுர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

  அதற்கேற்றார்போல், கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிராக்யா, "போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்" என்றார். 

  போபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். 

  இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் எதிர்பார்த்தபடி, போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக சாத்வி பிராக்யா தாகுர் அறிவிக்கப்பட்டுள்ளார். 

  1989 முதல் போபால் மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai