சுடச்சுட

  
  RAJNATH

  உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள லக்னௌ மக்களவைத் தொகுதிக்கான பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அத்தொகுதி தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
   வேட்பு மனுத் தாக்கலின்போது, ராஜ்நாத் சிங்குடன் மாநில பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே, துணை முதல்வர் தினேஷ் சர்மா, முன்னாள் மத்திய அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோர் உடனிருந்தனர்.
   வேட்பு மனுவுடன் ராஜ்நாத் சிங் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில் தனக்கு ரூ.4.62 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாகவும், அதில் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.2.97 கோடி, அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.1.64 கோடி எனத் தெரிவித்துள்ளார்.
   மனைவி சாவித்ரிக்கு ரூ.53 லட்சம் மதிப்பில் அசையும் சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரிவால்வர், இரட்டை குழல் துப்பாக்கி ஆகியவை தன்னிடம் இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
   முன்னதாக, வேட்பு மனுத் தாக்கலுக்காக ராஜ்நாத் சிங் சாலை மார்க்கமாக ஊர்வலமாக வந்தார். அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ராஜ்நாத் சிங்கை வரவேற்கும் வகையில், அவர் ஊர்வலம் சென்ற பாதையில் அமைந்துள்ள ஹஸ்ரத்கஞ்சில் மலர்களால் சிறப்பு அலங்காரத்தை பாஜக தொண்டர்கள் செய்திருந்தனர். அப்போது ஹஸ்ரத்கஞ்சிலுள்ள அனுமன் கோயிலில் ராஜ்நாத் சிங் சிறப்பு வழிபாடு நடத்தினார்.
   வேட்பு மனு தாக்கலையொட்டி, லக்னௌவில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் ராஜ்நாத் சிங் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மிகப்பெரிய உச்சத்துக்கு இந்தியாவை தனது பணிகள் மூலம் மோடி கொண்டு சென்றிருப்பதை உலக நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. 10 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்துள்ளேன். அந்த மாநிலங்களில் மோடிக்கு இருந்த ஆதரவு என்னை ஆச்சரியமடைய செய்தது. நாட்டின் பிரதமராக அவர் மீண்டும் பதவியேற்க வேண்டும் என்று ஒட்டுமொத்த நாட்டு மக்களும் விரும்புகின்றனர்' என்றார்.
   கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் லக்னௌ தொகுதியில் ராஜ்நாத் சிங் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து, அந்தத் தொகுதியில் அவர் தற்போது 2ஆவது முறையாக போட்டியிடுகிறார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai