உ.பி.யில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: 39 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரையும் அக்கட்சி அறிவித்துள்ளது.
 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 9 தொகுதிகளுக்கு கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், அந்த மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
 இதுதொடர்பாக அந்தக் கட்சியின் தலைவரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பார் கூறியதாவது:
 மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதி பங்கீடு குறித்து பாஜகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கோசி மக்களவைத் தொகுதியில் பாஜக சின்னத்தில் போட்டியிடுமாறு என்னை பாஜகவினர் வலியுறுத்தினர். நான் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் இந்த முறை தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளோம். கோரக்பூர், வாராணசி உள்பட 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம்.
 மாநிலத்தின் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு கூட தயாராக இருந்தேன். ஆனால் எனது ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.
 கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 4 தொகுதிகளில் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com