நாட்டின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது பாஜக: ராகுல் காந்தி

நாட்டின் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல் தொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
நாட்டின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது பாஜக: ராகுல் காந்தி

நாட்டின் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல் தொடுத்திருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
 கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்திலுள்ள பத்தனபுரத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
 இந்திய நாடானது, மக்களால் ஆட்சி செய்யப்பட வேண்டும். தனி நபர் அல்லது தனி சித்தாந்தத்தால் ஆளப்பட கூடாது. தற்போது நமது நாட்டின் மீது பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குதல் தொடுத்துள்ளன.
 தங்களது சொந்த குரலைத் தவிர்த்து, பிறரின் குரலை ஒடுக்க அவர்கள் விரும்புகின்றனர். நாட்டை ஒரேயொரு சித்தாந்தம் ஆட்சி செய்ய வேண்டும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, நாட்டை மக்களே ஆட்சி செய்ய வேண்டும் என்று நம்புகிறது. தனி சித்தாந்தத்தால் நாடு ஆளப்படுவதில் காங்கிரஸுக்கு நம்பிக்கையில்லை.
 எங்களது சித்தாந்தங்களை ஏற்கவில்லையெனில், உங்களை அழித்து விடுவோம் என்று அவர்கள் மிரட்டுகின்றனர். காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று பிரதமர் தெரிவிக்கிறார். இதற்கு, நாட்டில் இருந்து காங்கிரஸ் சித்தாந்தத்தை அவர்கள் அழித்து விடுவார்கள் என்பதே அர்த்தமாகும். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சியோ, அவர்களது சித்தாந்தத்தில் உடன்பாடு இல்லையென்றாலும் கூட, தேர்தலில் அவர்களை எதிர்த்து போட்டியிடும், பிறகு அவர்களது பாதை தவறு என்பதை புரிய வைக்கும். தேர்தலில் அவர்களை தோற்கடிக்கும். அதற்காக வன்முறையை பயன்படுத்தாது.
 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம், வயநாட்டில் நான் போட்டியிடுவதற்கு, சகிப்புத்தன்மை, பன்முக கலாசாரங்கள், உலகின் பிற பகுதியோடு இந்த மாநிலத்துக்கு இருக்கும் தொடர்பு ஆகியவையே முக்கிய காரணம் ஆகும். இவை அனைத்தையும் கேரளம் சுய இரக்கத்தோடு அல்லாமல் வெளிப்படையாகவும், அச்சமில்லாமல் நம்பிக்கையுடனும் ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் பிரதமர் பல வாக்குறுதிகளை அளித்தார். 2 கோடி வேலைவாய்ப்புகள், ரூ.15 லட்சம் டெபாசிட், விவசாய பொருள்களுக்கு குறைந்தப்பட்ச ஆதரவு விலை என பல வாக்குறுதிகளை அளித்தார். அதில் எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
 ரஃபேல் ஒப்பந்தத்தின் மூலம் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு ரூ.30,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இது மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ஓராண்டுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு இணையான தொகையாகும்.
 தேசியவாதம் பேசிக் கொண்டு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் எந்த முன் அனுபவமும் இல்லாத நிறுவனத்துக்கு மிகப்பெரிய ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அளித்துள்ளார். இதேபோல், நாட்டு மக்களின் ரூ.3.50 லட்சம் கோடி பணத்தை 15 தொழிலதிபர்களுக்கு மோடி வழங்கியுள்ளார் என்றார் ராகுல்.
 இதையடுத்து பத்தனம்திட்டாவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியபோது, மக்கள் தங்களது மனதில் இருப்பதை அமைதியாகவும், அஹிம்சா முறையிலும் வெளிப்படுத்தக்கூடிய இந்தியாவையே காங்கிரஸ் விரும்புகிறது என்றார்.
 தனது பிரசாரத்தின்போது, கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு குறித்து ராகுல் காந்தி எந்த குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. அதேபோல், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் குறித்தோ அல்லது அந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்கள் குறித்தோ ராகுல் காந்தி பேசவில்லை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com