Enable Javscript for better performance
திமுக - காங்கிரஸ் கூட்டணி ஊழல், வாரிசு அரசியல் கூட்டணி!- Dinamani

சுடச்சுட

  

  திமுக - காங்கிரஸ் கூட்டணி ஊழல், வாரிசு அரசியல் கூட்டணி!

  By DIN  |   Published on : 18th April 2019 12:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi4


  காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை இந்தியா முழுவதும் பரபரப்பாக பறந்துசென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதுவரை பதவி வகித்த இந்து பிரதமர்களில் முதல்முறையாக தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முதல் பிராமணரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பிரதமர் நரேந்திர மோடிதான் என்பது பரவலாக அறியப்படாத செய்தி. மிக அதிகமான விமர்சனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியிருக்கும் பிரதமர் மோடி; இன்னொருபுறம் இந்திரா காந்திக்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவராகவும் உயர்ந்திருக்கிறார். தனது பரபரப்பான தேர்தல் பிரசாரத்துக்கு இடையிலும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி.

  இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய பதிலடியை ஆளும் பாஜக தனது சாதனையாக பெருமை தட்டிக்கொள்வது சரிதானா?

  தங்கள் ஆட்சியின்போது, ராணுவம் பெற்ற வெற்றிக்கு காங்கிரஸ் கட்சியும் உரிமை கோரலாமே? யார் அவர்களை தடுக்கிறார்கள்? ஒரு அணை கட்டப்பட்டால் ஆளுங்கட்சி அதை தங்களின் சாதனை என்று சொல்லிக் கொள்வதில்லையா? அதைப் போலவே, பயங்கரவாதத்தை தூண்டி விட்டதற்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படுவதை, ஆளுங்கட்சி தங்களின் சாதனையாக குறிப்பிடலாம். 

  2014 தேர்தலின்போது இருந்த மக்கள் மனநிலைக்கும் இன்றைய நிலைக்கு என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்?
  பொதுவாக ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை நிலவும்போது மட்டுமே அரசியல் கட்சிகளின் பேரணிகளில் கூட்டத்தைக் காண முடியும். ஆனால் எங்கள் விஷயத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. தங்கள் வளமான எதிர்காலத்துக்காகாவும், இந்த ஆட்சியில் தக்கள் வாழ்க்கையில் உருவான மாற்றங்களுக்காகவும், இதே அரசு தொடர வேண்டும் என்பதற்காகவும் எங்கள் பின்னால் அணி திரள்கிறார்கள்.

  அண்மையில் நடந்துமுடிந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் பாஜகவின் வெற்றி வாய்ப்பில் தாக்கம் ஏற்படுத்துமா?
  தவறான வாக்குறுதிகளை அள்ளி வீசி இந்த மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது.
  இந்த 3-4 மாதங்ககளில் காங்கிரஸ் கட்சியின் பணப் பட்டுவாடா இயந்திரமாக இந்த மாநிலங்கள் மாற்றப்பட்டிருக்கின்றன என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் அம்பலப்படுத்துகின்றன. குழந்தைகளின் சத்துணவுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி கட்சி நடவடிக்கைகளுக்காக திருடப்பட்டிருப்பது வெட்கக்கேடானது. இளம் பருவத்தினரின் வளர்ச்சிக்கு உதவ வேண்டிய அரசு நிதியை மடைமாற்றி நாட்டின் எதிர்காலத்துடன் அவர்கள் விளையாடுகிறார்கள். 
  இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் காங்கிரஸ் கட்சியின் மரபணுவை மாற்ற முடியாது என்பதை அனுபவப்பூர்வமாக புரிந்துகொண்டுவிட்டார்கள். அவர்களது அதிருப்தி இந்த மக்களவைத் தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். அவர்களை நிராகரிக்க மக்கள் காத்திருக்கிறார்கள்.

  தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரமும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவும் மேற்கு வங்காளம், வட கிழக்கும் மாநில மக்களிடையே பெரும் எதிர்ப்பைச் சந்தித்துள்ளனவே?
  நமது வடகிழக்கு மாநில சகோதரர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொள்கையளவில் புரிந்துகொண்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி நடத்திவரும் பொய்ப் பிரசாரம் எடுபடாது. ஒட்டுமொத்த கிழக்கு மாநிலங்களையும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களையும் பாரபட்சமாக நடத்திவந்த காங்கிரஸ் கட்சிக்கு அவர்களைக் குறித்துப் பேசும் துணிவு வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறேன்.

  மேற்கு வங்காளத்தில் பாஜக எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
  மேற்கு வங்க மாநில மக்களின் நம்பிக்கையை மிக வேகமாக இழந்துவரும் அம்மாநிலத் தலைவி தனது பதவிக்குப் பாதுகாப்பின்மையை உணர்கிறார்.  தனது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மேற்கு வங்காளம் எழுதப்போவது மே 23-இல் தெரியவரும். திரிபுராவில் என்ன நடந்ததோ அதுவே மேற்கு வங்கத்திலும் விரைவில் நடக்கும்.

  பாஜக இன்னும் ஒரு வட இந்திய கட்சியாகத்தான் தென்னிந்தியாவில் பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? 
  வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு - எதுவானாலும், செயல்படும் அரசையே மக்கள் விரும்புகிறார்கள். பாஜக ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சி என்ற தவறான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. தென்னிந்திய  மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசாக  பாஜக அரசைக் காண்கிறார்கள். மக்களின்  நம்பிக்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பாஜக  போராடும் என்பதை கேரளத்தில் காட்டி இருக்கிறோம். 
  அதேசமயம், உள்ளூர் தலைமையை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து புறக்கணித்து வந்திருக்கிறது. தென்னகத்தை சேர்ந்த காமராஜர், எம்.ஜி.ஆர்., டாக்டர்  ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட யாருக்கேனும் நினைவிடங்களை காங்கிரஸ் அரசு நிறுவி இருக்கிறதா? 
  அவர்களைப் பொருத்தவரை ஒரு குடும்பத்தின் உறுப்பினர்கள் மட்டுமே முன்னுரிமை பெற்றவர்களாக உள்ளனர். அந்த குடும்பத்தைச் சேராதவர்களின் பங்களிப்பு இருட்டடிப்பு செய்யப்படுகிறது. பாஜக அப்படி செயல்படவில்லை. அதுதான் அவர்களுக்கு எங்கள் மீதான ஆத்திரத்துக்கு காரணம்.

  சபரிமலை விவகாரத்தால் பாஜகவுக்கு லாபம் கிடைக்காது என்றும் காங்கிரஸ் கட்சியே லாபம் அடையும் என்றும் மக்கள் கூறுகிறார்களே?
  எங்களைப் பொருத்தவரை, சபரிமலை விவகாரம் கொள்கை தொடர்பானது. அவர்களைப் போல அரசியல் ஆதாயம் அல்ல எங்கள் நோக்கம். ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையையும், இந்து மதத்தின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாப்பதே கடமை என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதனால்தான்,  கடுமையாக பாதிக்கப்பட்டாலும் பாரம்பரியம் காக்கும் போரில் பாஜகவினர் முன் நிற்கின்றனர். 
  காங்கிரஸ் கட்சியினர் தில்லியில் ஒன்றைச் சொல்வார்கள்; மாறாக, கேரளத்தில் ஒன்றைச் சொல்வார்கள். நாடாளுமன்றத்தில் ஒருவிதமாகவும், பத்தனம்திட்டாவில் ஒருவிதமாகவும் பேசுவார்கள். 
  சபரிமலை விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் போராடத் திட்டமிட்டபோது, அதை எவ்வாறு சோனியா காந்தி தடுத்தார் என்பதை அனைவரும் அறிவர். அது கேரள கலாசாரத்துக்கு அவமதிப்பு அல்லவா? 
  எங்களைப் பொருத்தவரை, தேர்தல் லாபங்களுக்காக சபரிமலை விவகாரத்தில் ஈடுபடவில்லை; கேரளத்தின் பாரம்பரியத்தைக் காக்க வேண்டும் என்பதே எங்கள் லட்சியம்.

  தமிழகத்தைப் பொருத்தவரை, ஜெயலலிதாவும் கருணாநிதியும் இல்லாமல் நடைபெறும் முதல் தேர்தல் இது. இரு தரப்பிலும் வலுவான கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி?
  தமிழக மக்கள் முன் தெளிவான வாய்ப்பு காத்திருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியது, சுகாதாரத் திட்டங்களை மேம்படுத்தியது, ராணுவத் தளவாடம் மற்றும் விமான ஊர்திக் கருவிகளுக்கான தொழில் மையமாக தமிழகத்தை உருவாக்கியது ஆகியவற்றின் மூலமாக மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் மத்தியில் உள்ள எங்களது அரசும் கரம்கோத்துச் செயல்பட்டிருக்கின்றன. மத்திய, மாநில அரசுகளால் மீனவர்கள் நலம் பெற்றிருக்கிறார்கள். மீன்பிடி தொழிலின் மேம்பாட்டுகாக பல வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கிறோம். எண்ணற்ற நல்ல பணிகள் இங்கு நடந்தேறி இருக்கின்றன. 

  திமுக காங்கிரஸ் கூட்டணியும் வலுவானதாக இருக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?
  ஊழல் கூட்டணிகள் வலுவாகத்தான் காட்சியளிக்கும். திமுக- காங்கிரஸ் கூட்டணி ஊழல் மற்றும் வாரிசு அரசியலின் கூட்டணி. அவர்களது நோக்கமெல்லாம் எதையாவது சொல்லி, வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும். தங்களது குடும்ப அதிகாரத்தைத் தொடர வேண்டும். ஊழல் ஆட்சியை ஏற்படுத்தி ஆதாயம் தேட வேண்டும். திமுகவும் காங்கிரஸþம் இணைந்து ஆட்சி நடத்திய பத்தாண்டு கால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் ஊழல்களை மக்கள் மறந்துவிடவில்லை. 

  நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதற்கு உங்கள் பதில் என்ன?
  எங்கள் ஆட்சியில் வேலைவாய்ப்பை இழந்தவர்கள் உண்டு என்றால், அவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான். அவர்களை தேர்தல்களில் மக்கள் தொடர்ந்து புறக்கணிப்பதால் வேலையை இழந்திருக்கிறார்கள். அவர்கள்தான் தற்போது வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாக ஓலமிடுகிறார்கள்.  
  தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவனம் மற்றும் தொழிலாளர் காப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த ஓராண்டில் மட்டும் மாதத்துக்கு 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. அதாவது ஆண்டுக்கு 1.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  பிரதமர் தொழில் மறுமலர்ச்சி திட்டத்தின் மூலமாக சுமார் ஒரு கோடி தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். நாஸ்காம் அறிக்கை வெளியிட்ட தகவலின்படி தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன. நாட்டின் வேலைவாய்ப்பில் 15%  வகிக்கும் துறையில் கோடிக்கணக்கான வேலைகள் உருவாகும் நிலையில், வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை நீங்களே யோசித்துப் பாருங்கள்.
  சில புள்ளி விவரங்கள் வேலை வாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அல்லவா கூறுகின்றன?
  முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட அரசின் நடவடிக்கைகளால் முறைசாரா தொழில்களில் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கின்றன. கடந்த 4  ஆண்டுகளில் 17 கோடி பேருக்கு முத்ரா தொழில் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. அவற்றில் 4.25 கோடி பேர் முதல்முறை தொழில் துவங்குபவர்கள். இதிலிருந்து 4 கோடி பேர் புதிய தொழில் முனைவோராக உருவாகி இருப்பதை உணர முடியும்.
  சிஐஐ அமைப்பு நடத்திய ஆய்வு ஒன்றில், கடந்த 4 ஆண்டுகளில் குறு, சிறு,  மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வாயிலாக 6 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் சுற்றுலா மூலமாக வரும் வருவாயும் 50 சதவீதம் அதிகரித்திருக்கின்றன. இது சுற்றுலாத் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் இருக்குமா?
  வேலைவாய்ப்பு என்றால் அரசுப் பணியும், தனியார் நிறுவனப் பணிகளும் மட்டுமல்ல. சுய தொழில் முனைவோரின் எண்ணிக்கையை நாங்கள் கணிசமாக அதிகரித்திருக்கிறோம்.

  ஆனால் அப்படியொரு தோற்றம் ஏற்படவில்லையே?
  கடந்த சில ஆண்டுகளில் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறி இருக்கிறது. எங்கள் அரசின் ஆட்சிக்காலத்தில் நிலவும் பொருளாதார வளர்ச்சி விகிதமே, 1991 முதல் தற்போது வரையிலான காலத்தில் மிக அதிகபட்சமாகும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்காமல் இது சாத்தியமாகுமா?
  இந்தியாவில் ஏழ்மை குறைந்துவருவதாக சர்வதேச அறிக்கைகள் கூறுகின்றன. நாட்டில் வேலைவாய்ப்பு பெருகாமல் இது சாத்தியம் ஆகுமா? நாட்டின் நேரடி அந்நிய முதலீடு இதுவரை காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்புகள் அதிகரிக்காமல் இது நடந்திருக்குமா?
  சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே கட்டுமானங்கள், வீடுகள் போன்றவை தொடர்ந்து அமைக்கப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கை கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தைவிட இருமடங்கு வேகத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த உள்கட்டமைப்பு வசதிகள் வேலைவாய்ப்பு பெருகாமல் சாத்தியமாக முடியுமா?
  உலக அளவில் ஸ்டார்ட்-அப் தொழில்மையங்கள் மிகுந்த நாடாக இந்தியா உள்ளது. ஸ்டார்ட்-அப் தொழில் பொருளாதாரம் வளர்ந்தும் வருகிறது. செல்லிடப்பேசி செயலி மூலம் நடத்தப்படும் வர்த்தகமும் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்புகள் பெருகாமல் இவை சாத்தியமாகுமா?

  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. அந்த முடிவு சரியானதுதான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எதிர்க்கட்சியினர் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. அந்த அதிரடி நடவடிக்கையையைத் தொடர்ந்து குஜராத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில், எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தையும் மீறி பாஜகவை மக்கள் ஆதரித்தனர் என்பதை நாடு கண்டது.
  கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்த யாராவது என்றாவது செயல்பட்டே ஆக வேண்டும். அதையே நாங்கள் செய்தோம். அதனால், கருப்புப் பணத்துக்கு எதிரான, மிகவும் ஆக்கப்பூர்வமான பயன்களை நாடு பெற்றுள்ளது.
  கடந்த நான்கரை ஆண்டுகளில் கருப்புப்பணத்துக்கு எதிரான நடவடிக்கைகளின் பலனாக, வருமான வரித்துறை வருமானத்துக்கு மிஞ்சிய ரூ. 1,30,000 கோடியைக் கண்டறிந்து,  அதன்மூலமாக அபராதம் மற்றும் வரி விதித்து, வருவாயைப் பெருக்கி உள்ளோம். ரூ. 50,000 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்திருக்கிறோம். இந்தக் காலகட்டத்தில் ரூ. 6,900 கோடி மதிப்பிலான  பினாமி சொத்துகளும், ரூ. 1,600 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. 3,38,000 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டு களையெடுக்கப்பட்டுள்ளன.
  நாட்டின் வரி வருவாய் ஆதாரம் இரு மடங்காகி இருக்கிறது. கள்ளத்தனாக நடந்து வந்த வர்த்தகம் முறைப்படுத்தப்பட்டிருப்பதால் இது சாத்தியமாகி இருக்கிறது.

  ரஃபேல் போர்விமான விவகாரம் குறித்து உங்களது கருத்து என்ன?
  முந்தைய அரசுகளின் ஆயுத பேரங்களில் சர்ச்சை மட்டும் உருவாகவில்லை; அதில் ஊழலும் மிகுந்திருந்தது. அதற்கு ஆயுதப் பேர தரகர்களின் தலையீடே காரணம். ஆனால், ரஃபேல் விவகாரத்தில் அத்தகைய எந்த சர்ச்சையையும் காண முடியாது. ஊழலைத் தவிர்க்க, ரஃபேல் ஒப்பந்தமானது, இந்தியா- ஃபிரான்ஸ் ஆகிய இரு நாட்டு அரசுகளிடையிலானதாக கையெழுத்திடப்பட்டுள்ளது. அதில் மூன்றாவது நபர் அல்லது தரகரின் தலையீடே கிடையாது.  போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தால் கறை படிந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் ஒப்பந்தம் குறித்து சந்தேகம் கிளப்பித் தங்கள் ஊழலை மறைக்க முயற்சிக்கிறார். எனினும் மக்கள் அனைத்து உண்மைகளையும் அறிந்துள்ளனர்.
  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான புகார்களை உச்ச நீதிமன்றமும் மத்திய கணக்கு தணிக்கை ஆணையரும் நிராகரித்த பிறகும்கூட, அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் சுமத்தி வருகிறது. இதுகுறித்து சுதந்திரமான ஊடகங்கள் கேள்வி எழுப்பி இருக்க வேண்டும். இத்தகைய அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் எங்கிருந்து கிளம்புகின்றன, சதி பற்றிய சிந்தனைகள் எவ்வாறு பரப்பப்படுகின்றன என்பது குறித்து ஊடகங்கள்தான் கேள்வி எழுப்ப வேண்டும். ஊடகங்களுக்கு  ஆட்சியில் இருப்போரிடம் என்ன கேள்வியை வேண்டுமானாலும் எழுப்பும் தைரியம் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், ஆட்சியில் இல்லாதோரிடம் உங்களால் கேள்வி எழுப்ப முடியவில்லை என்பது எனக்கு வியப்பளிக்கிறது.

  வாராக்கடன் பிரச்னையே தனியார் துறை முதலீட்டில் தேக்கம் ஏற்படவும், வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படவும் காரணம் என்றும் கூறப்படுகிறதே?
  முந்தைய ஐ.மு.கூட்டணி அரசு தொலைபேசி வாயிலாக வங்கிக்கடன் வழங்குமாறு உத்தரவிட்டு போன் பேங்கிங் முறையை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. 2006 முதல் 2014 வரையிலான எட்டாண்டுகளில் எந்த ஆதாரமும் இல்லாமல் கண்ணை மூடிக் கொண்டு வழங்கிய வங்கிக் கடன்களால் வங்கிகளின் விதிமுறைகள் மீறப்பட்டன. அவை அதுவரையிலான தங்கள் ஒட்டுமொத்த கடன் வழங்கும் திறனுக்கு அதிகமாகவே கடன் வழங்குமாறு நிர்பந்திக்கப்பட்டன.
  இந்த போன் பேங்கிங் கலாசாரத்தின் நஷ்டங்களை நமது பொருளாதாரம் சுமக்க வேண்டியதாயிற்று. இதனால் வங்கித் துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் சீரழிந்த நிதி நிறுவனங்களைச் சீராக்க கடுமையான சட்டங்களை உருவாக்கினோம். அதன்மூலமாக ரூ. 3 லட்சம் கோடி வாராக்கடனை வசூலித்துள்ளோம். இதை எங்கள் அரசின் சாதனையாகவே குறிப்பிடலாம். எதிர்காலத்திலும் வாராக்கடன் வசூல் அதிகமாகவே இருக்கும்.

  பொருளாதார மோசடியாளர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடு தப்பிச் செல்ல உங்கள் அரசு உதவியதாக எதிர்க்கட்சிகள் அடிக்கடி குற்றம் சாட்டுகின்றன. அந்த மோசடியாளர்கள் எவ்வாறு வெளிநாடுகளில் பாதுகாப்பாக தஞ்சம் புக முடிகிறது?
  போபர்ஸ் ஊனழலில் குட்ரோச்சியை தப்பியோட விட்டவர்கள்தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள் என்பது வேடிக்கையாக இல்லையா?
  நான் நடுநிலையாளர்களிடம் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் தொடர்புடைய இடைத்தரகர் கிறிஸ்டியன் மிஷெல் வெளிநாட்டில் இருந்து நாடு கடத்திக் கொண்டு வரப்படவில்லையா? 
  பொருளாதார மோசடியாளர்கள் தீபக் தல்வார், ராஜீவ் சக்úஸனா ஆகியோர் வெளிநாட்டுகளில் இருந்து நாடு கடத்திக் கொண்டுவரப்பட்டு சட்டத்தை எதிர்கொள்ளுமாறு செய்யப்படவில்லையா?
  தப்பி ஓடும் மோசடியாளர்களின் கதை துவங்கியதே ஐ.மு.கூட்டணி ஆட்சியால்தானே? அவ்வாறு தப்பியவர்களை நாங்கள் நாடு கடத்தி இழுத்து வருகிறோம். 
  இப்போதுகூட, இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பொருளாதார மோசடியாளர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டு, அந்த நாடுகளின் சட்டப்படி விசாரணைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் நாட்டுக்கு திரும்பக் கொண்டுவர சட்டப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அவர்களின் மோசடிகளுக்கு பொறுப்பேற்கச் செய்து அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்துவோம்.

  உங்கள் அரசின் முதல் முக்கிய முடிவே திட்டக் குழுவைக் கலைத்ததுதான். அதன் பிறகு நீதி ஆயோக் அமைக்கப்பட்டது. இந்த புதிய அமைப்பு உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி செயல்படுகிறதா?
  எனக்கு முன்னாலும்கூட, மன்மோகன் சிங் போன்றவர்களே திட்டக் குழு தேவையற்ற ஒன்று என குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு மாநில அரசும் பழைய திட்டக் குழு மீது பல புகார்களைத் தெரிவித்துள்ளனர். நானும்கூட குஜராத் முதல்வராக இருந்தபோது அத்தகைய அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன். திட்டக் குழு என்பது மத்திய அரசின் கைப்பாவையாகப் பயன்படும் அரசியல் கருவி என்ற தோற்றம் ஏற்பட்டுவிட்டது. 60 ஆண்டுகாலமாக இயங்கிய திட்டக்குழுவுடன் ஐந்தாண்டுகளாகச் செயல்படும் நீதி ஆயோக் அமைப்பை ஒப்பிடுவது சரியாக இருக்காது. இப்போதைக்கு நல்ல துவக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

  தற்கால அரசியல், பிரச்னைகளின் அடிப்படையில் இல்லாது தனிநபர் சார்ந்ததாக மாறி வருவதாக கருத்து நிலவுகிறது. பிரச்னைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. ஏன் இப்படி?
  நீங்கள் எனது பேச்சுகளை கவனித்தால், வளர்ச்சி ஒன்றை முக்கியமாக குறிப்பிட்டு வருவதைக் காண முடியும். இந்த விஷயத்தில் நடுநிலையாளர்கள் உண்மைகளை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நாங்கள் ஏழைகளுக்கு வீடுகளைக் கட்டித் தந்திருக்கிறோம். விவசாயிகளுக்கு யூரியா உரம் தட்டுப்பாடின்றிக் கிடைக்க  வலுவான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். வளர்ச்சியை மையமாகக் கொண்ட விஷயங்களிதான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

  உங்களது மிகப்பெரிய சாதனை என்று எதை நினைக்கிறீர்கள்?
  2014-க்கு முந்தைய ஆட்சியின் ஊழல்களால் மக்கள் விரக்தி அடைந்திருந்தார்கள். இப்போது ஊழலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதை  உணர்ந்திருக்கிறார்கள். ஊழலற்ற அரசு சாத்தியமே என்று நாங்கள் உறுதிப்படுத்தி இருக்கிறோம். பொருளாதாரத்தைப் பொருத்தவரை, வளரும் நாடாக இருந்த பாரதம் தற்போது மிக வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக மாறி வருகிறது. இந்த நிலையிலிருந்து 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக 2025-க்குள் நமது நாடு உயர வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

  இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால் முதலில் நீங்கள் நிறைவேற்ற விரும்பும் உறுதிமொழி எது?
  என்னைப் பொருத்த வரை, கட்சியின் தேர்தல் அறிக்கையில்  கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களுமே முக்கியமானவை. ஒன்று சிறந்தது - மற்றொன்று தாழ்வானது என்று நான் கருதவில்லை. அதைவிட, மே 23-க்குப் பிறகு நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதில் கொஞ்சம் ரகசியமும் 
  இருக்கட்டுமே!

  நேர்காணல்: ஜி.எஸ்.வாசு, ஹெச்.கோகென் சிங், மணீஷ் ஆனந்த்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai