தேர்தல் நடத்தை விதிமீறல்: நாகாலாந்து துணை முதல்வர் மீது காங்கிரஸ் புகார்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி நாகாலாந்து துணை முதல்வர் ஒய். பட்டான் மீது காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக குற்றம்சாட்டி நாகாலாந்து துணை முதல்வர் ஒய். பட்டான் மீது காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.
நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு கடந்த 11-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஒய். பட்டான் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அந்த மாநில காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
தேர்தல் நாளின்போது, தனது சொந்த தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு, தலையில் கட்சியின் சின்னம் பதித்த துண்டை பட்டான் கட்டிச் சென்றுள்ளார். அதுமட்டுமன்றி பதிலி வாக்குப்பதிவு முறையில், மற்றவர்களுக்காக அவர் வாக்குகளை பதிவு செய்துள்ளார். இவ்வாறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்துக்காக அவர் மீது வோகா மாவட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம். அவரது சொந்த தொகுதியான 37-தியூ தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,  காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில் 37-தியூ தொகுதியில் விசாரணை நடத்தினோம். வாக்குச்சாவடிகளின் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர்களின் அறிக்கைப்படி, வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நடைபெறவில்லை. அதனால் மீண்டும் அங்கு வாக்குப்பதிவு நடத்துமாறு காங்கிரஸ் விடுக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com