ராமர், ராவணனுக்கு இடையேயான யுத்தமே மக்களவைத் தேர்தல்: சித்து பேச்சால் புதிய சர்ச்சை

கடவுள் ராமர், ராவணனுக்கு இடையேயான யுத்தமே, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை
ராமர், ராவணனுக்கு இடையேயான யுத்தமே மக்களவைத் தேர்தல்: சித்து பேச்சால் புதிய சர்ச்சை


கடவுள் ராமர், ராவணனுக்கு இடையேயான யுத்தமே, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாவட்டத்திலுள்ள டோல்கா நகரில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சித்து புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கடலுக்கு அடியில் சீனா ரயில் பாதையை அமைக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழ்வதற்குரிய சூழல் உள்ளதா என்று அமெரிக்கா ஆய்வு செய்கிறது. ரோபோட்டுகளை கொண்ட ராணுவத்தை அமைக்கும் முயற்சியில் ரஷியா ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்தியா என்ன செய்கிறது?
பாதுகாவலரை (பிரதமர் மோடி) உருவாக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. அந்த பாதுகாவலரும், திருடர் ஆவார்.
தேசியவாதம் குறித்து மோடி பேசுகிறார். அவருக்கு ஒன்று தெரிவித்து கொள்கிறேன். இந்த மக்களவைத் தேர்தலானது, கடவுள் ராமருக்கும், ராவணனுக்கும் இடையேயான யுத்தமாகும். கோட்சேவுக்கும், காந்திக்கும் இடையேயான யுத்தமாகும்.
சாதி, நிறம், இனம் அடிப்படையில் மக்களுக்கு இடையே பாகுபாடு காட்டக்கூடாது என்று அரசியலமைப்புச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு  காட்டப்படக் கூடாது எனவும் அரசியலமைப்புச் சட்டம் குறிப்பிடுகிறது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ, நாட்டை பிளவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதை செய்து கொண்டு, தம்மை தேசியவாதி எனத் தெரிவிக்கிறார். இது எந்த வகையிலான தேசியவாதம் எனத் தெரியவில்லை.
கோயில், மசூதி குறித்து மோடி பேசுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சியோ, வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகள் பிரச்னை, ஏழைகள் குறித்து பேசுகிறது. இந்த பிரச்னைகள் குறித்து மோடி பேசுகிறாரா? என பாருங்கள். இந்த முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை அவர் திசை திருப்புகிறார். பொய்களை மட்டுமே தொடர்ந்து மோடி பேசி வருகிறார். இந்த விவகாரங்கள் குறித்து என்னுடன் விவாதம் நடத்தத் தயாரா? என்று மோடிக்கு நான் சவால் விடுக்கிறேன் என்றார் நவ்ஜோத் சித்து.
தேர்தல் பிரசாரத்தில் மதத்தின் பெயரையோ, கடவுளின் பெயரையோ பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மக்களவைத் தேர்தலை கடவுள் ராமருக்கும், ராவணனுக்கும் இடையேயான யுத்தம் என சித்து பேசியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com