இந்தியர்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் எஸ்பிஐ வங்கி: குற்றம்சாட்டுகிறார் விஜய் மல்லையா

கடனைத் திரும்பக் கொடுக்கும் போது பெற்றுக் கொள்ளாமல், இந்தியர்களின் வரிப்பணத்தை இங்கிலாந்தில் நடைபெறும் வழக்குக்காக எஸ்பிஐ வங்கி வீண் செலவு செய்து வருகிறது என்று விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியர்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் எஸ்பிஐ வங்கி: குற்றம்சாட்டுகிறார் விஜய் மல்லையா


லண்டன்: கடனைத் திரும்பக் கொடுக்கும் போது பெற்றுக் கொள்ளாமல், இந்தியர்களின் வரிப்பணத்தை இங்கிலாந்தில் நடைபெறும் வழக்குக்காக எஸ்பிஐ வங்கி வீண் செலவு செய்து வருகிறது என்று விஜய் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.

தன்னை நாடு கடத்தக் கோரி இங்கிலாந்தில் நடைபெறும் வழக்குக்கான சட்ட நடவடிக்கைகளுக்கு மிக அதிக அளவிலான தொகையை எஸ்பிஐ வங்கி செலவிட்டு வருவதாகவும் விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக அறிவித்தும், அதை வங்கிகள் ஏற்காதது ஏன்? என்று தொழிலதிபர் விஜய் மல்லையா சில நாட்களுக்கு முன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், எஸ்பிஐ வங்கி மீது இன்று நேரடியாகக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9, 000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கி விட்டு அதை திருப்பிச் செலுத்தாத மல்லையா, தற்போது பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடக்கோரி, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதையடுத்து,  கடந்த டிசம்பர் மாதம் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் அனுமதியளித்தது. அந்த உத்தரவுக்கு எதிராக பிரிட்டன் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக,  இந்திய வங்கிகளில் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்த தயாராக இருப்பதாக விஜய் மல்லையா அறிவித்திருந்தார். 

இந்நிலையில் இந்திய வங்கிகள் மீது குற்றம்சாட்டி அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் அதிக அளவில் முதலீடு செய்தேன். இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் சிறந்த ஏர்லைன்ஸ் நிறுவனமாக எனது நிறுவனம் விருது பெற்றது.

பொதுத் துறை வங்கிகளில் இருந்து கடன் பெற்றது உண்மைதான். வங்கிகளில் இருந்து பெற்ற 100 சதவீத பணத்தையும் லண்டனில் இருந்தோ அல்லது இந்தியாவில் சிறையில் இருந்துகொண்டோ, திருப்பிச் செலுத்த தயாராக உள்ளேன். ஆனால் அதை ஏற்பதற்கு வங்கிகள் மறுப்பது ஏன்? பணத்தை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக என் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்வது ஏன்?  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனருக்கு ஆறுதல்: இதனிடையே, நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நரேஷ் கோயலுக்கு விஜய் மல்லையா ஆறுதல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில்,  ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், எங்கள் நிறுவனத்துடன் போட்டியுடன் செயல்பட்ட நிறுவனம். எனினும், அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலையை நினைத்தால் எனக்கு வருத்தமாக உள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா ஏர்லைன்ஸ் நிறுவனம் நிதிநெருக்கடியில் இருந்தபோது மக்களின் வரிப் பணத்தில் ரூ. 35,000 கோடியை அந்த நிறுவனத்துக்கு அரசு அளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்களுக்கு பிரச்னை என்றால் அரசு கண்டுகொள்வதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய ஏர்லைன்ஸ் நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாக கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. அந்த நிறுவனத்தின் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் பாதிக்கும் மேல் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com