தில்லியில் காங்கிரஸ் தனித்து போட்டி, வேட்பாளர்களும் தயார் என தகவல்

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் காங்கிரஸ் தனித்து போட்டி, வேட்பாளர்களும் தயார் என தகவல்


தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் தனித்து போட்டியிட காங்கிரஸ் தயாராகிவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நீடித்து வந்தது. பாஜகவை வீழ்த்துவதற்காக இந்த கூட்டணி அமைக்கப்படுவதாக இரண்டு கட்சிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், தில்லியில் கூட்டணி அமைத்து போட்டியிட காங்கிரஸ் மறுத்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். அதன்பிறகு, இரண்டு கட்சிகளுக்கிடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. 

ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் சமூகமாக நடைபெற்றதாக தெரியவில்லை. இந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தெரிவிக்கையில், "தில்லியில் 7 சீட்டுகள் வரை கொடுக்க, காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால், அரவிந்த் கேஜரிவால் யு-டர்ன் அடிக்கிறார்" என்று குற்றம்சாட்டியிருந்தார். 

இதையடுத்தும், இரண்டு கட்சிகளுக்கிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் எட்டப்படவில்லை என்று தெரிகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"ஆம் ஆத்மி கட்சியுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தில்லியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. புதுதில்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான், சாந்தினி சௌக் தொகுதியில் இருந்து முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித், மேற்கு தில்லியில் இருந்து சுஷில் குமார் மற்றும் கிழக்கு தில்லியில் இருந்து அரவிந்தர் ல்வ்லி ஆகியோரை களமிறக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், தெற்கு தில்லியில் இருந்து ரமேஷ் குமார், வடக்கு தில்லியில் இருந்து ராஜ்குமார் சௌஹான் மற்றும் வடகிழக்கு தில்லியில் இருந்து ஜே.பி. அகர்வால் ஆகியோர் களமிறக்கப்படவுள்ளனர்" என்றார்.  

தில்லியில் மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் தில்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com