இன்னமும் குஜராத்தின் டார்லிங்காகவே இருக்கிறாராம் அவர்: மக்களே சொல்கிறார்கள்!

பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்காகவே, குஜராத் வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்கிறார்கள் மக்கள்.
இன்னமும் குஜராத்தின் டார்லிங்காகவே இருக்கிறாராம் அவர்: மக்களே சொல்கிறார்கள்!


சூரத்: பிரதமர் நரேந்திர மோடியின் பெயருக்காகவே, குஜராத் வாக்காளர்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்கிறார்கள் மக்கள்.

சூரத்தில் உள்ள வைரக் கற்கள் பாலிஷ் போடும் தொழிற்சாலையில் பணியாற்றும் விவேக் போடர் (25) என்பவர் கூறுகையில், சூரத்தில் பாஜக வேட்பாளராக ஒரு கழுதை நிறுத்தப்பட்டால் கூட பிரதமர் மோடிக்காகவே அனைவரும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று கூறுகிறார்.

சாலையோர கடையில் தனது நண்பர்களுடன் உணவருந்திக் கொண்டிந்த விவேக் போடர் கூறுகையில், நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வாக்காளர்களாலும் மிகவும் விரும்பப்படும் நபராக மோடி இருக்கிறார் என்கிறார்.

வதோதராவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் பஞ்சால் (30), பிரதமர் மோடி பற்றி கேட்டதுமே, தனது கையில் இருந்த ஸ்மார்ட் போனை எடுத்து அதில் ரஷ்யா வழங்கிய உயரிய விருதினை பிரதமர் மோடி பெற்றுக் கொள்ளும் விடியோவைக் காட்டி பெருமிதம் கொள்கிறார்.

அதே சமயம் குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதையும் ஒப்புக் கொள்கிறார்கள் மக்கள். ஆனால் நாட்டின் மெட்ரோ ரயில் திட்டம், நெடுஞ்சாலைகள் என மேம்பட்டிருப்பதையும்  அவர்களே நமக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.

18 வயது முதல் 40 வயது வரையிலான வாக்காளர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டியையும் கொண்டாடுகிறார்கள். அதே சமயம், வயதான வாக்காளர்கள் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமரிசிக்கிறார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம், வேலையிழப்பு போன்றவற்றுக்காக எல்லாம் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸை தேர்வு செய்ய குஜராத் மக்கள் தயாராக இல்லையாம்.

பணமதிப்பிழப்பின் போது பலரும் வேலை வாய்ப்புகளை இழந்தோம்தான். ஆனால் தற்போது நிலைமை மீண்டும் சீராகி வருகிறது என்கிறார் ராஜேஷ்பாய் என்கிற தையல்காரர்.

மற்ற மாநிலங்களைப் போல குஜராத்தில் பெண்களுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லை. மறுபக்கம் குடிநீர் பிரச்னை இருந்தாலும் அதற்காக பாஜகவை குற்றம்சொல்ல முடியாது என்கிறார்கள் தெளிவாக.

வரும் 23ம் தேதி குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com