இது மக்களின் அதிகாரம் என்பதை பாஜக மறந்துவிட்டது: வயநாட்டில் பிரியங்கா வதேரா

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தவர்கள் இது மக்களின் அதிகாரம் என்பதை மறந்துவிட்டனர் என்று காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா தெரிவித்தார்.
இது மக்களின் அதிகாரம் என்பதை பாஜக மறந்துவிட்டது: வயநாட்டில் பிரியங்கா வதேரா

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்தவர்கள் இது மக்களின் அதிகாரம் என்பதை மறந்துவிட்டனர் என்று காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா வதேரா தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல், அமேதி மட்டுமல்லாது கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதையடுத்து அங்கு மனுதாக்கல் செய்து தீவிர பிரசாரமும் செய்து வருகிறார். 

மேலும் மனுதாக்கலின் போது உடனிருந்த அவரது தங்கையும், உ.பி. காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா, வயநாடு தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இங்கு ஒரு அரசு ஆட்சியமைத்தது. நாட்டு மக்கள் அனைவரும் அந்த கட்சியின் மீது முழு நம்பிக்கை வைத்து ஆட்சிக்கு வரவைத்தனர். ஆனால், அந்த அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து வருகிறது.

ஆட்சியில் இருக்கும் இந்த அதிகாரம் கூட மக்கள் அளித்தது என்பதை மறந்து அதனை தங்களின் அதிகாரமாகவே பார்க்கத் தொடங்கிவிட்டது. இதனை ஆட்சிக்கு வந்தவுடனேயே அவர்களும் நிரூபித்துவிட்டனர். குறிப்பாக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு தனிநபரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதை தேர்தல் ஆதாயத்துக்காக மட்டுமே அறிவித்தது பின்னர் தெரியவந்தது. இதனால் தான் இந்த அரசை பொய் என்று விமர்சித்து வருகிறோம்.

நான் இங்கு வந்திருப்பதற்கு முக்கிய காரணம், நான் பிறந்ததில் இருந்து எனக்கு நன்கு தெரிந்த ஒருவருக்காகத் தான். இங்கு நான் உங்களின் தங்கையாக வந்திருக்கிறேன். அவர்தான் இம்முறை உங்களின் வேட்பாளர். கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சிகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர். அவர் மீது உண்மைக்கு மாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

சிறு வயதில் இருந்தே நாங்கள் மிகப்பெரிய பேரிழப்புகளை சந்தித்து வருகிறோம். எங்களின் குடும்பமும் மிகச் சிறியது. முதலில் எங்கள் வீட்டிலேயே எங்களுக்கெல்லாம் முதன்மையாக இருந்த இந்திராவும் பின்னர் கல்லூரிப் பருவத்தில் எங்கள் தந்தை ராஜீவ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக படிப்பு முடித்தவுடன் எனது சகோதரர், அமேதி தொகுதியில் 2004-ல் களமிறங்கினார். 

பாஜக, காங்கிரஸ் கொள்கைகளில் சிறு வேறுபாடு தான் உள்ளது. ஒரு திட்டத்தை நிறைவேற்றினால் அது காங்கிரஸ், பொய் திட்டத்துடன் பிரசாரம் செய்தால் அது பாஜக. அதேபோன்று மக்களின் வளர்ச்சிக்காக துணை நிற்பதும் காங்கிரஸ் தான். 

இது என்னுடைய நாடு. இங்குள்ள மலைகளும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள வயல்களும் என்னுடைய நாடு தான். தமிழகம், குஜராத், வடகிழக்கு என அனைத்தும் என் நாடு தான். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பாஜக, நாடு முழுவதும் பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com