வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் பிணையில்லா கடன்: பிரதமர் மோடி வாக்குறுதி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன், ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக்
வணிகர்களுக்கு ரூ.50 லட்சம் பிணையில்லா கடன்: பிரதமர் மோடி வாக்குறுதி


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன், ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டு, கடன் அட்டை , சிறுவணிகர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். மேலும், தேசிய வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 
அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) சார்பில் தேசிய வணிகர்கள் மாநாடு தில்லி தால்கதோரா உள்விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: 
வணிகர்கள், வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு ஒப்பானவர்கள். எதிர்காலத்தை நன்கு கணிக்கத் தெரிந்த அவர்கள், பருவ காலங்களுக்கு ஏற்ப தேவையான பொருள்களை முன்பே வாங்கி வைக்கும் வழக்கம் உள்ளவர்கள். நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் வணிகர்களிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். 
காங்கிரஸ் ஆட்சியில் விலைவாசி உயர்வின்போது மக்களை திருப்திப்படுத்த வணிகர்களை குறை சொல்லும் வழக்கம் இருந்தது. காந்தியும் வணிகச் சமூகத்திலிருந்து வந்தவர்தான். ஆனால் திருடர்கள் என்று கூறி வணிகர்களை காங்கிரஸ் தற்போது அவமானப்படுத்தியுள்ளது. 
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாள்தோறும் சட்டங்களையும், விதிகளையும் உருவாக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என 2014-இல் வணிகர்கள் மாநாட்டில்  தெரிவித்திருந்தேன். அதை இப்போது மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன். 
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தேவையற்ற 1,500 விதிகளை குப்பைக்கு அனுப்பியுள்ளோம். 
வணிகத்தையும், மக்களின் வாழ்க்கையையும் எளிமையாக்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம். 
ஒரே தேசம் - ஒரே வரி என்ற கனவை நனவாக்கியுள்ளோம். வணிகர்கள் எதிர்கொண்டு வந்த பல்வேறு பிரச்னைகளுக்கு ஜிஎஸ்டியால் தீர்வு காணப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பிறகு, வணிகத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட வணிகர்களின் எண்ணிக்கை 2 மடங்கியாகியுள்ளது.
ஜிஎஸ்டியால் ஏற்பட்ட குறைகளைக் களைவதற்கு அவ்வப்போது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூடி வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வரி விதியில் மாற்றம் செய்வதற்கு நிதிநிலை அறிக்கை காத்திருக்க வேண்டியிருந்தது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறோம். 
பெரும்பாலான அன்றாட பயன்பாட்டுப் பொருள்களுக்கு வரி நீக்கப்பட்டுள்ளது. 98 சதவீத பொருள்களுக்கு 18 சதவீதத்துக்கும் குறைவான வரி விதிக்கப்படுகிறது. 
வணிகம் எளிமையாக்கலில் உலக நாடுகளில் 77-ஆவது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 65-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் 50-ஆவது இடத்தை பிடிக்க வேண்டும். 
பாஜகவின் 5 ஆண்டு கால தேர்ச்சி அறிக்கை எங்கே எனக் கேட்பவர்களுக்கு, அந்த அறிக்கையை இப்போது தருகிறேன். பாஜகவின் 5 ஆண்டு கால ஆட்சியில் 70 ஆயிரம் பெண்கள் நாள்தோறும் இலவச சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றனர். நாள்தோறும் 50 ஆயிரம் மின் இணைப்பு வசதிகள் செய்யப்பட்டன. ஜன்தன் திட்டத்தில் நாள்தோறும் 2 லட்சம் பேர் வங்கிக் கணக்கைத் தொடங்கினர். முத்ரா திட்டத்தில் நாள்தோறும் 1 லட்சம் பேருக்கு வங்கிக் கடன்  அளிக்கப்பட்டது.
வரும் மே 23-ஆம் தேதி அன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், சில்லரை வர்த்தகத்துக்கு தேசியக் கொள்கை வகுக்கப்படும். வணிகர்களுக்கு பிணையம் இல்லாமல் ரூ.50 லட்சம் வரை கடன் அளிக்கப்படும். ஜிஎஸ்டி பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம், கடன் அட்டை , சிறுவணிகர்களுக்கு  ஓய்வூதியத் திட்டம் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும்.
தேசிய வணிகர்கள் நல வாரியம்: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஏற்றுமதியை 2 மடங்காக்குவோம். 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி வணிகர்களின் பங்கு இல்லாமல் சாத்தியமில்லை. ஜனசங்க காலத்திலிருந்தே இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியத்தை எதிர்த்து வந்த வரலாறு உண்டு. 
வறுமை, நோய், தூய்மையின்மை ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்டு வருகிறோம். பாஜக தேர்தல் அறிக்கையில் வணிகர்கள் நலனுக்கு பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  ஆட்சிக்கு வந்தவுடன் தேசிய வணிகர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.  இது அரசுக்கும் வணிகர்களுக்கும் ஒரு பாலமாக இருக்கும் வகையில்  நிரந்தரமாகச் செயல்பட வழிவகை செய்யப்படும் என்றார் பிரதமர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com