விளையாட்டில் இருந்து அரசியலுக்கு...

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் திருவிழாவில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களும் தங்கள் அதிருஷ்டத்தை சோதிக்க களத்தில் குதித்துள்ளனர். பல்வேறு விளையாட்டுகளில் ஜொலித்த வீரர்,
விளையாட்டில் இருந்து அரசியலுக்கு...


நாடாளுமன்ற பொதுத் தேர்தல் திருவிழாவில் இந்திய விளையாட்டு நட்சத்திரங்களும் தங்கள் அதிருஷ்டத்தை சோதிக்க களத்தில் குதித்துள்ளனர். பல்வேறு விளையாட்டுகளில் ஜொலித்த வீரர்,வீராங்கனைகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய முடிவு செய்து தேர்தலில் குதித்து வென்றுள்ளனர். விளையாட்டைப் போலவே அரசியலிலும் அவர்கள்  வெற்றிகரமாக வலம் வருகின்றனர். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நீண்ட காலமாகவே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏனைய விளையாட்டுகளும்  முக்கியத்துவம் பெற்று வருகின்றன. எனினும் அதிக எண்ணிக்கையிலான விளையாட்டு நட்சத்திரங்கள் அரசியலில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை. சொற்ப எண்ணிக்கையிலேயே காலூன்றி வெற்றிக் கொடிநாட்டியுள்ளனர்.


முந்தைய தேர்தல்களில் வெற்றிக் கொடி நாட்டியவர்கள்
முகமது அசாருதீன் (கிரிக்கெட்)
கிரிக்கெட்டில் இருந்து முகமது அசாருதீன் கடந்த 2009-இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உத்தரப் பிரதேச மாநிலம்,  மொராதாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் 2014 தேர்தலில் தோல்வியுற்றார். இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக தற்போதும் கருதப்படும் அசாருதீன், தற்போது தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி செயல் தலைவராக உள்ளார். கிரிக்கெட்டில் சர்ச்சைகளின் உருவமாகவும் திகழ்ந்தார்.
நபீஸா அலி (நீச்சல்) 
2 முறை தேசிய நீச்சல் சாம்பினான நபீஸா அலி, கடந்த 2004-இல் திரிணமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தெற்கு கொல்கத்தா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2009-இல் லக்னெள தொகுதியில் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து போட்டியிட்ட நபீஸா, நவம்பரில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விட்டார். நபீஸா பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர். விளையாட்டு தவிர, நடிப்பு, அழகிப் போட்டிகளிலும் வென்றுள்ளார்.
அஸ்லம் ஷேர் கான் (ஹாக்கி) 
1975 உலகக் கோப்பை ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர். கடந்த 1984-இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஷெர் கான் பேதுல் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1989-இல் தோல்வியைத் தழுவி அவர், 1991-இல் அதே தொகுதியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். 1997-இல் பாஜகவில் இணைந்த அஸ்லம், 1999-இல் விலகிவிட்டார்.
ஜோதிர்மயி சிக்தர் (தடகளம்) 
தடகளத்தில் தங்க மங்கையாக திகழ்ந்த ஜோதிர்மயி சிக்தர் அரசியல் வானிலும் ஜொலித்தார். 1998-இல் பாங்காக் ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற சிக்தர், 2004-இல்அரசியலில் குதித்து தேர்தலில் போட்டியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மேற்கு வங்கம், கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சிக்தர், 2009-இல் தோல்வியுற்றதால், அரசியலில் தொடரவில்லை.
ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் 
(துப்பாக்கி சுடுதல்)
2004-ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராணுவ வீரரான ரத்தோர், ஓய்வு பெற்ற பின், பாஜகவில் இணைந்தார். கடந்த 2014 தேர்தலில் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவரை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக நியமித்தார் மோடி.  பின்னர் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பையும் ஆற்றிவருகிறார். 
அவரது தலைமையின் கீழ் இந்திய விளையாட்டுத் துறை பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.  தற்போது மீண்டும் அதே தொகுதியில் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார்.

2019 தேர்தலில் களமிறங்கும் விளையாட்டு வீரர்கள்
பாய்ச்சுங் பூட்டியா (கால்பந்து)

இந்திய கால்பந்து வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்த சிறந்த வீரர்களில் ஒருவர் பாய்ச்சுங் பூட்டியா. கேப்டனாகவும் திகழ்ந்த பூட்டியா ஹம்ரோ சிக்கிம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியின் சட்ட விதிகள் வித்தியாசமாக வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கட்சித் தலைவர், எம்.பி., எம்.எல்.ஏ. பதவி வகிப்போர் 2 முறைக்கு மேல் மீண்டும் அப்பதவியை வகிக்க முடியாது என்பதாகும்.


கிருஷ்ணா புனியா (தடகளம்)
கிருஷ்ணா புனியா தடகளத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த வட்டு எறியும் வீராங்கனை. இவர் ஒலிம்பிக், ஆசிய, காமன்வெல்த் போட்டிகளில் வெற்றிக் கொடி நாட்டி நமது நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். தற்போது காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ள கிருஷ்ணா 
2019 தேர்தலில் ஜெய்ப்பூர் ஊரக தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோரை எதிர்த்து களம் காண்கிறார்.
கீர்த்தி ஆஸாத் (கிரிக்கெட்)
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட பெயர் கீர்த்தி ஆஸாத். கடந்த 1983-இல் முதன்முறையாக உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். பிகார் முன்னாள் முதல்வர் பகவத் ஜா ஆஸாத் மகனாவார். கடந்த 2014 தேர்தலில் பிகார் தர்பங்கா தொகுதியில் பாஜக சார்பில் வெற்றி பெற்றார். தில்லி மாநில கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அருண் ஜேட்லி இருந்தபோது முறைகேடு நடைபெற்றதாக புகார் கூறினார் கீர்த்தி ஆஸாத். இதனால் பாஜக மேலிடத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது காங்கிரஸ் கட்சி சார்பில் ஜார்க்கண்டில் உள்ள தன்பாத் தொகுதியில் களம் காண்கிறார். தில்லியில் எம்.எல்.ஏ. பதவியும் வகித்துள்ளார் ஆஸாத்.
கெளதம் கம்பீர் (கிரிக்கெட்)
மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரரான கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். அண்மையில் பாஜகவில் இணைந்த கம்பீருக்கு தில்லியில் உள்ள ஏதாவது ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவ்ஜோத் சிங் சித்து (கிரிக்கெட்)
இந்திய கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் பெற்ற வீரரான சிக்ஸர் சித்து எனப்படும் நவ்ஜோத் சிங் சித்துவும் அரசியலில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். கடந்த 2004-இல் பாஜகவில் இணைந்தார். பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் தொகுதியில் இரு முறை வென்று மக்களவை உறுப்பினராக இருந்தார். 2016-இல் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும் 2017-இல் பாஜகவில் இருந்து விலகி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், அமிருதசரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ. ஆனார். தற்போது பஞ்சாப் மாநில அமைச்சரவையில் சுற்றுலா, கலாசாரத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com