சுடச்சுட

  

  குடியுரிமை, கல்வி விவரங்களை ராகுல் தெளிவுபடுத்த வேண்டும்: பாஜக வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 21st April 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தனது குடியுரிமை, கல்லூரியில் பெற்ற பட்டம் ஆகிய விவரங்களை, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
  ராகுல் காந்தியின் வேட்புமனு தொடர்பாக, தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பாஜக இவ்வாறு தெரிவித்துள்ளது.
  மக்களவைத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது குடியுரிமை, கல்லூரியில் பெற்ற பட்டம் ஆகியவை சந்தேகத்துக்கு இடமான வகையில் இருப்பதாக அமேதி தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சுயேச்சை வேட்பாளர் துருவ் ராஜ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
  இந்தப் புகார் தொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
  ராகுல் காந்தி, பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றில் கடந்த 2004-ஆம் ஆண்டு முதலீடு செய்தார். அந்த நிறுவன அதிகாரிகள் ராகுல் காந்தி பிரிட்டனைச் சேர்ந்த குடிமகன் என்று கூறுகின்றனர். மேலும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், பொருளாதார மேம்பாடு பாடப்பிரிவில் முதுகலை ஆய்வுப் பட்டம் பெற்றதாகத் தனது வேட்புமனுவில் ராகுல் முதலில் குறிப்பிட்டிருந்தார். பின்னர், மேம்பாட்டுப் பாடப்பிரிவிலேயே பட்டம் பெற்றதாக அவர் கூறினார். இவ்வாறு தகவல்களை மாற்றிக் கூறுவது பெரும் குற்றமாகும்.
  இவை தொடர்பாக, ராகுல் தரப்பிடம் விளக்கம் கேட்டபோது, அவர்கள் உடனடியாகப் பதிலளிக்கவில்லை. திங்கள்கிழமை வரை அவர்கள் காலஅவகாசம் கோரியுள்ளனர். இது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுலின் குடியுரிமை குறித்து பதிலளிக்க காங்கிரஸூக்கு காலஅவகாசம் தேவைப்படுவது ஏன்? ராகுல் காந்தி, இந்தியக் குடிமகனா அல்லது பிரிட்டிஷ் குடிமகனா? பல்வேறு பெயர்களில் அவர் வெளிநாடுகளுக்குச் சென்றாரா? ராகுலின் உண்மையான கல்வித்தகுதி என்ன? இவையனைத்துக்கும் ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்.
  கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில், தவறான தகவல்களுடன் அவர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார் என்றார் ஜி.வி.எல். நரசிம்ம ராவ். 
  அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா கூறுகையில், ""இந்த விவகாரத்தை காங்கிரஸ் சட்டரீதியாக எதிர்கொள்ளும்'' என்றார்.
  ராகுல் காந்திக்கு எதிரான புகார் தொடர்பாக, திங்கள்கிழமை (ஏப். 22) விசாரணை நடத்த இருப்பதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக இருதரப்பினரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இருந்தபோதிலும், வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மீது சிலர் ஆட்சேபம் தெரிவிப்பதாக இருந்தால், அவர் நீதிமன்றத்தையே நாட வேண்டும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai