சுடச்சுட

  

  மகளை காக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தும் பவார்: ஃபட்னவீஸ் கிண்டல்

  By DIN  |   Published on : 21st April 2019 02:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  devendrafadanvis

  தேர்தலில் மகளைக் காக்கும் பணியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தீவிர கவனம் செலுத்தி வருவதாக மகாராஷ்டிர முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
  மக்களவைத் தேர்தலில் பாரமதி தொகுதியில், சரத் பவாரின் மகள் சுப்ரியா சூலே போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக சரத் பவார் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். இதையே ஃபட்னவீஸ் கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம், புணே அருகே உள்ள காடக்வஸ்லாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
  பெண் குழந்தைகளை காப்போம் என்ற கோஷத்தை மோடி தந்தார். அதைத்தான் சரத் பவார், பாரமதியில் தற்போது செய்து வருகிறார். இதேபோல் மோடியின் கோஷம் ஏதேனும் ஒன்றை பவாரின் மகள் சுப்ரியா சூலேயும் ஏற்க வேண்டும்.
  பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்துவோம் என்று மோடி எச்சரிக்கை விடுத்தார். அதையே, பாஜக தொண்டருக்கு எதிராக சூலே செய்துள்ளார். தேர்தல் குறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டபோது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்,  தாம் அதிரடியாக சதம் அடிக்கப் போவதாக குறிப்பிட்டார். ஆனால், பிறகு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். தற்போது அவர் போட்டியில் விளையாடாத கேப்டனாகி விட்டார். தேர்தலில் மோடியை மகாராஷ்டிர நவநிர்மான் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே விமர்சித்து வருவதை பார்க்கையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்னொரு கட்சியை சேர்ந்தவர் முக்கிய பேச்சாளராக கிடைத்து விட்டார் என்பது தெரிகிறது.
  ரயில் என்ஜின் ஒன்றை (ராஜ் தாக்கரே கட்சியின் சின்னம் ரயில் என்ஜின்) தேசியவாத காங்கிரஸ் வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த என்ஜினால் எந்த பயனும் கிடையாது. மாநிலத் தேர்தல்கள், பஞ்சாயத்து தேர்தல் ஆகியவற்றில் அந்த என்ஜின் வேலை செய்யவில்லை. அத்தகைய என்ஜினுக்குதான் சரத் பவார் தலைமை தாங்குகிறார் என்றார் ஃபட்னவீஸ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai