சுடச்சுட

  
  PRIYANKA

  "தங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு துரோகம் இழைத்து விட்டது' என்று உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்தார்.
  கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இதையொட்டி, அந்த தொகுதிக்குள்பட்ட மானந்தவாடி மற்றும் புல்பள்ளி பகுதிகளில், தனது சகோதரரை ஆதரித்து பிரியங்கா சனிக்கிழமை பேசியதாவது:
  இந்தியாதான் என்னுடைய நாடு. இங்கிருக்கும் இந்த மலைகளும் எனது நாடுதான். தமிழகம், குஜராத், வடகிழக்கு மாநிலங்கள், உத்தரப் பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்கள் அனைத்தும் எனது நாடுதான். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த பாஜக, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பிரிவினைவாதத்தை தூண்டி அரசியல் செய்துள்ளது. அவர்களை எதிர்த்து கேள்வி எழுப்பினால், நம்மை தேசியவாதிகள் இல்லை என்று கூறிவிடுவார்கள்.
   பாஜக மாதிரி பலவீனமான அரசையும், பிரதமர் நரேந்திர மோடி மாதிரி பலவீனமான பிரதமரையும் நான் கண்டதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாகவும், இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகவும் பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன்,  ஆட்சியில் அமர்த்திய மக்களை அக்கட்சி மறந்து விட்டது.  
  5 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்றது.  பாஜக கூட்டணி மீது  நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். ஆனால் பாஜக என்ன செய்தது? ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே மக்களது நம்பிக்கையை கெடுத்து விட்டது.
  அனைத்து அதிகாரமும் நம்மிடம்தான் உள்ளது; மக்களிடம் எதுவும் இல்லை என்று பாஜகவினர் நம்பத் தொடங்கி விட்டனர். அதை பொய் என்று மக்கள் நிரூபிக்க வேண்டும். பாஜகவை தோற்கடித்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார் பிரியங்கா. 
  மேலும், ராகுலும், தானும் வளர்ந்த விதம், முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டது ஆகியவை குறித்தும் பிரியங்கா உருக்கமாக உரையாற்றினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai