Enable Javscript for better performance
வாக்குவங்கி அரசியலுக்கே காங்கிரஸ் முக்கியத்துவம்: நரேந்திர மோடி- Dinamani

சுடச்சுட

  

  வாக்குவங்கி அரசியலுக்கே காங்கிரஸ் முக்கியத்துவம்: நரேந்திர மோடி

  By DIN  |   Published on : 21st April 2019 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi2

  தேச நலனைக் காட்டிலும், வாக்குவங்கி அரசியலுக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
  பிகார் மாநிலம், அராரியாவில் பாஜக கூட்டணி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரசாரம் செய்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
  மக்களவைக்கு 2 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல்களுக்குப் பிறகு வெளியாகி வரும் தகவல்களை கண்டு, காங்கிரஸூம் அதன் கூட்டணிக் கட்சிகளும் கவலையில் ஆழ்ந்துள்ளன. நமது பாதுகாப்புப் படை வீரர்கள் எல்லை தாண்டி சென்று நடத்தியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதற்கு அக்கட்சிகளிடம் தற்போது துணிச்சல் இல்லை.
  ஒதுக்கீடு இல்லாத பணியிடங்களில் 5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் திட்டத்தை, இடஒதுக்கீட்டை முழுவதும் ரத்து செய்ய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை என்று பொய் பிரசாரம் நடத்தப்படுகிறது. இந்த பொய்களை நம்பிவிட வேண்டாம்.
  நமது நாடானது, இரண்டுவித அரசியல்களை கண்டுள்ளது. அதில் ஒன்று, வாக்கு பக்தி அரசியல். இன்னொன்று, தேச பக்தி அரசியல். இதில் முதலாவது அரசியல் செய்வோர், 2008ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதலின்போது, மத்தியில் ஆட்சியிலிருந்தனர். அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தை ஆதரித்த பாகிஸ்தானை தண்டிக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
  அதேபோல், பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளையும் தடம்புரளச் செய்தனர். அதற்கு ஹிந்து தீவிரவாதம் என்ற கதையை தெரிவித்தனர்.
  தேச பக்தி அரசியலை, உரித் தாக்குதலுக்குப் பிறகு துல்லியத் தாக்குதல் மூலமாகவும்,  புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு விமானப்படைத் தாக்குதல் வாயிலாகவும் நாங்கள் நிரூபித்து காட்டினோம் என்றார் மோடி. கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பிகார் முதல்வருமான நிதீஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
  இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநிலம், இடாவாவில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
  2017ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலுக்காக சமாஜவாதியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தன. அந்தத் தேர்தல் முடிவுகள்  வெளியானதும், அக்கட்சிகள் இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டது. இருகட்சிகளும் பரஸ்பரம் ஒன்றையொன்று குற்றம்சாட்டின. 
  இதேபோல், அத்தை (மாயாவதி), மருமகன் (அகிலேஷ் யாதவ்) இடையேயான போலியான நட்பும் முடிவுக்கு வரும். அந்த நட்பு முறியும் தேதியும் முடிவு செய்யப்பட்டு விட்டது. போலியான அந்த நட்புறவு, மே 23இல் முடிவுக்கு வந்து விடும். அன்றைய நாளில், இருவரும் பகைமையை வெளிப்படுத்துவார்கள்.
  சுயநல சக்திகளால், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் குறித்து சிந்திக்க முடியாது. ஏழைகள் பெயரில் அரசியல் செய்து தங்களது வங்கி இருப்பை அதிகரித்து கொள்கின்றனர். 
  சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளின் கொடிகள்தான் வேறு. அவர்களின் உள்நோக்கம், ஒன்றுதான்.
  அத்தையின் ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஊழல் மலிந்திருந்தது. மருமகன் ஆட்சியில், தலித்துகளுக்கு எதிராக அடக்குமுறைகள் நடைபெற்றன. மருமகனுடன் கூட்டணி சேரும் அத்தையின் முடிவை ஜீரணிக்க முடியவில்லை என்று மோடி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai