பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்: தமிழகம் உள்பட 13 மாநிலங்களில் நவீன தடயவியல் ஆய்வகங்கள்

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்காக, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் விரைவில் நவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்காக, தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் விரைவில் நவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் சனிக்கிழமை கூறியதாவது:
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் குற்றங்களை தடுக்கும் வகையில், தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், திரிபுரா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்பட 13 மாநிலங்கள் மற்றும் தில்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் நவீன தடயவியல் ஆய்வகங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
ரூ. 131.09 கோடி செலவில் டிஎன்ஏ பரிசோதனை வசதிகள், ரூ. 223 கோடி செலவில் இணைய தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் அதற்கான பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த திட்டத்தில் பணியாற்றுவதற்காக, 410 வழக்குரைஞர்கள், நீதிபதிகள் உள்பட 3, 664 பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 
அருணாசலப் பிரதேசம், ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் இணைய தடயவியல் பயிற்சி ஆய்வகங்கள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன.
பெண்களின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட "நிர்பயா நிதி'யின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலர் இந்த திட்டத்தை மேற்பார்வையிடும் குழுவின் தலைவராக செயல்படுவார் என்று கூறினர்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகத்திடம் உள்ள தகவலின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக இணையவழி குற்றங்களில் ஈடுபட்டதாக கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் 12,187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2015-ஆம் ஆண்டு பதிவான வழக்குகளை ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் பெண்களுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com