மாயமான தேர்தல் அலுவலரை தேடும் பணி தீவிரம்: மேற்கு வங்க அரசு தகவல்

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மாயமான தேர்தல் அலுவலரை தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் சுமித் குப்தா, இத்தகவலை தெரிவித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை மாயமான தேர்தல் அலுவலரை தேடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் சுமித் குப்தா, இத்தகவலை சனிக்கிழமை தெரிவித்தார்.
ரானாகத் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களை பராமரிக்கும் பொறுப்பு, அர்னாப் ராய் என்ற அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
அந்தத் தொகுதியில் வரும் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தேர்தல் பணிகளை கவனிக்கச் சென்ற அவரை திடீரென காணவில்லை. இதையடுத்து, அவரது மனைவி அனிஷா ஜாஷ், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதேசமயம், நாடியா மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும், தேர்தல் அலுவலர் மாயமானது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சுமித் குப்தா கருத்து தெரிவிக்கையில், ""அந்த அதிகாரியைக் கண்டறிய வேண்டும். அதற்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது'' என்றார்.
மாயமான அதிகாரியின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள், அனைத்துக் காவல் நிலையங்கள், ஊடகங்கள், அண்டை மாநிலங்கள் உள்பட பல்வேறு தரப்புக்கு பகிர்ந்துள்ள போதிலும், அவர் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று சுமித் குப்தா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com