யாசின் மாலிக் உண்ணாவிரதம்: குடும்பத்தினர் கவலை

தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) காவலில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடல்நிலை நலிவடைந்து வருவதாக, அவருடைய

தேசியப் புலனாய்வு அமைப்பின்(என்ஐஏ) காவலில் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் உண்ணாவிரதம் இருப்பதால், அவரது உடல்நிலை நலிவடைந்து வருவதாக, அவருடைய உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதியுதவி அளித்து வந்ததாக, பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, அவரை 12 நாள்கள் காவலில் விசாரிப்பதற்கு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 10-ஆம் தேதி அனுமதி வழங்கியது. இந்நிலையில், அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளதாக, அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை பேட்டியளித்த யாசின் மாலிக் குடும்பத்தினர் கூறியதாவது:
யாசின் மாலிக்கை சந்திப்பதற்காக, ஜம்முவில் உள்ள சிறைக்குச் சென்றோம். அவர், தில்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அவரைச் சந்திக்காமல் திரும்பி வந்து விட்டோம். அப்போதிலிருந்து எங்கள் தரப்பு வழக்குரைஞர்தான், யாசின் மாலிக்கைச் சந்தித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னை என்ஐஏ அமைப்பு சட்டவிரோதமாகக் காவலில் எடுத்திருப்பதாகக் கூறி, கடந்த 10-ஆம் தேதியில் இருந்து அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவரங்கள் அனைத்தும் எங்கள் தரப்பு வழக்குரைஞர் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், சிறை நிர்வாகம் இதுகுறித்து எங்களுக்கு எந்தத் தகவலும் அளிக்கவில்லை.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள யாசின் மாலிக்கின் உடல்நிலை மிகவும் நலிவடைந்திருப்பது கவலை அளிக்கிறது என்று அவர்கள் கூறினர்.
இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், யாசின் மாலிக்கின் உயிருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமாபாதில் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சார்பில், வரும் 25, 26 ஆகிய இரு தினங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com